logo
துப்பாக்கி உரிமம் பெற்றவர்கள் சுய பாதுகாப்புக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் போலீசார் அறிவுரை

துப்பாக்கி உரிமம் பெற்றவர்கள் சுய பாதுகாப்புக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் போலீசார் அறிவுரை

19/Nov/2020 07:11:17

ஈரோடு:திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் விவசாயி பலியான சம்பவத்தை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் காவல்துறை சார்பில் துப்பாக்கி உரிமம் பெற்றவர்களுக் கான கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் துப்பாக்கி உரிமம் பெற்றவர்கள் கணக்கெடுக்கும் பணியும் ,உரிமம் பெறாதவர்கள் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி வருவது குறித்தும் தகவல் சேகரிக்கப்பட்டு வருகிறது. 

திண்டுக்கல் அசம்பாவிதம் போல்  நடைபெறாமல் தவிர்ப்பதற்காகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வும் காவல்துறையினர் மேற்கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அந்தியூர் ,அம்மாபேட்டை பர்கூர், வெள்ளிதிருப்பூர் ஆகிய நான்கு  காவல்நிலையத்திற்கு  உட்படுத்தப்பட்ட பகுதிகளில் துப்பாக்கி உரிமம் பெற்றவர்களுக்கான ஆலோசனை கூட்டம் அந்தியூரில் நடந்தது.

பவானி டி.எஸ்.பி. கார்த்திகேயன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் நான்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள துப்பாக்கி உரிமம் பெற்ற 131 பேர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் பவானி டி.எஸ்.பி கார்த்திகேயன் கூறும்போது, துப்பாக்கி உரிமம் பெற்றவர்கள் பல்வேறு தரப்பினை சேர்ந்தவர்களாக இருந்த போதிலும் உரிமம் பெற்றுள்ளவர்கள் துப்பாக்கிகளை  தங்களது சுய பாதுகாப்புக்காக  மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

சொந்த பிரச்சினைக்காக பயன்படுத்தக் கூடாது. துப்பாக்கி உரிமம் பெற்றவர்கள் மட்டுமே துப்பாக்கியை பயன்படுத்த வேண்டும். உரிமம் பெற்றவர்கள் உறவினர்களோ அல்லது நண்பர்களோ பயன்படுத்துவது சட்டப்படி குற்றம். மேலும் துப்பாக்கி உரிமம் பெற்றவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை தங்களது உரிமத்தை தவறாமல் மறு பதிவு செய்ய வேண்டும்.  

துப்பாக்கிகளை தவறாக பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் உரிமம் பெற்றவர்கள் மற்றும் துப்பாக்கிகளை பயன்படுத்துவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதில், இன்ஸ்பெக்டர்கள் ரவி குமரவேல் உள்பட  அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல், கோபி போலீஸ் சரகத்தில் உள்ள கோபி கவுந்தப்பாடி ,திங்களூர், சிறுவல்லூர், நம்பியூர் வரட்டுப்பள்ளம், கடத்தூர் ஆகிய போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் துப்பாக்கி உரிமம் பெற்ற 300 பேர் கலந்து கொண்ட  ஆலோசனை கூட்டம் கோபியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் துப்பாக்கிகளை எப்படி பயன்படுத்துவது பராமரிப்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. இன்ஸ்பெக்டர்கள் மகாலிங்கம் சண்முகவேலு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 


Top