logo
சென்னையில்  எழுத, படிக்க தெரியாதவர்களுக்கு எழுதவும், படிக்கவும் பயிற்சி  - ஆட்சியர்  சீத்தாலட்சுமி தகவல்

சென்னையில் எழுத, படிக்க தெரியாதவர்களுக்கு எழுதவும், படிக்கவும் பயிற்சி - ஆட்சியர் சீத்தாலட்சுமி தகவல்

18/Nov/2020 12:39:36

சென்னை: எழுத, படிக்க தெரியாதவர்களுக்கு சென்னையில் 429 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் எழுத, படிக்க கற்றுத்தர அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இது குறித்து,சென்னை மாவட்ட கலெக்டர் சீத்தாலட்சுமி  வெளியிட்ட தகவல்: தமிழ்நாடு எழுத்தறிவு முனைப்பு ஆணையத்தின் கீழ் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் மூலம் 15 வயதிற்கு மேற்பட்ட முற்றிலும் எழுதவும், படிக்கவும் தெரியாத கல்லாதோர்க்கு தன்னார்வலர்கள் கொண்டு எழுத்தறிவு வழங்கிட ‘கற்போம் எழுதுவோம் இயக்கம்” என்ற புதிய வயது வந்தோர் கல்வி திட்டம் மத்திய அரசு மற்றும் தமிழக அரசால் வழங்கியுள்ள கொரோனா வைரஸ் தொற்று பரவலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகளைப் பின்பற்றி சென்னை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தில் கற்பிக்க ஆர்வமுள்ள 10–ம் வகுப்பு முடித்த பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், என்.சி.சி., என்.எஸ்.எஸ். மாணவர்கள், ஓய்வுப் பெற்ற ஆசிரியர்கள், வயது வந்தோர் கல்வித்திட்டங்களில் முன்பே பணிபுரிந்தவர்கள் ஆகியோர் தன்னார்வலர்களாகத் தெரிவுச் செய்யப்பட்டுள்ளனர். சிறப்பாகச் செயலாற்றும் தன்னார்வலர்களுக்கு மாவட்ட கலெக்டரின் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கப்படும்.

சென்னையில் 429 மையங்கள்: சென்னை மாவட்டத்தில் 429 கற்போர் கல்வியறிவு மையங்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அமைக்கப்பட உள்ளது. இம்மையங்களில் கற்பிக்கவிருக்கும் தன்னார்வலர்களுக்கு இத்திட்டம் சார்ந்த செயல்பாடுகள் குறித்து மாவட்ட அளவில் பயிற்சி பெற்ற ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் ஆசிரியர்களால் மண்டல அளவில் 18–ந் தேதி மற்றும் 19–ந் தேதி ஆகிய இரண்டு நாட்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து 23–ம் தேதி முதல் சென்னை மாவட்டத்தில் 429 கற்போர் கல்வியறிவு மையங்கள் செயல்படத் தொடங்கும். இதன் மூலம் இக்கல்வி ஆண்டில் 9,671 கல்லாதோர் பயன்பெறுவர்  என்றார் ஆட்சியர்.


Top