logo
ஆரணியில் கியாஸ் சிலிண்டர் வெடித்து உயிரிழந்த 3 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம்: முதல்வர் அறிவிப்பு

ஆரணியில் கியாஸ் சிலிண்டர் வெடித்து உயிரிழந்த 3 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம்: முதல்வர் அறிவிப்பு

15/Nov/2020 05:58:22

சென்னை:கியாஸ் சிலிண்டர் வெடித்து உயிரிழந்த 3 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.எரிவாயு சிலிண்டரை உபயோகிக்கும்போது பொதுமக்கள் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம் மற்றும் நகரத்தில் வசிக்கும் முத்தம்மாள் என்பவரின் வீட்டில் இன்று காலை எரிவாயு கசிவு ஏற்பட்டு, சிலிண்டர் வெடித்ததில், காமாட்சி, சிறுவன் ஹேமநாதன் மற்றும் சந்திரா அம்மாள் ஆகிய மூன்று நபர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

இந்த விபத்தில் நான்கு நபர்கள் காயமடைந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து வருத்தமடைந்தேன். மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று எனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேற்கண்ட துயர சம்பவத்தில் உயிரி ழந்த காமாட்சி, ஹேமநாதன் மற்றும் சந்திரா அம்மாள் ஆகிய மூன்று நபர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அமைச்சர் நேரில் சென்றார்: இந்ததச் செய்தி குறித்து அறிந்தவுடன், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறவும், காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிப்பதை உறுதி செய்து கொள்ளவும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கும், திருவண்ணாமலை மாவட்ட கலெக்டருக்கும் உத்தரவிட்டுள்ளேன்.

அதன்படி, அமைச்சர் தலைமையில், மாவட்ட கலெக்டர், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினர், காவல் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் மீட்புப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர்.

தலா ரூ.2 லட்சம்: இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த காமாட்சி, ஹேமநாதன் மற்றும் சந்திரா அம்மாள் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சமும்; பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா  ரூ. 1 லட்சமும்; சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 மும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க  உத்தரவிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களது வீடுகளில் எரிவாயு சிலிண்டரை உபயோகிக்கும் போது, கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என இத்தருணத்தில் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு எடப்பாடி கே. பழனிசாமி கூறியுள்ளார்.

Top