logo
தீபாவளி கூட்டம்: முக்கிய வீதி பகுதிகளில் 15 இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தி போலீசார் தீவிர கண்காணிப்பு

தீபாவளி கூட்டம்: முக்கிய வீதி பகுதிகளில் 15 இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தி போலீசார் தீவிர கண்காணிப்பு

12/Nov/2020 10:18:21

ஈரோடு: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருப்பதால் ஈரோடு மாநகர் முக்கிய கடை வீதிகளான ஈஸ்வரன் கோவில் வீதி பன்னீர்செல்வம் பூங்கா பகுதி மணிக்கூண்டு பகுதி, ஆர் கே.வி. சாலை உள்ளிட்ட  கடை வீதிகளில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக உள்ளது.

கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் பொதுமக்களிடம் நகை பணம் பறித்து விடும் சம்பவம் அவ்வப்போது நடைபெற்று வருகிறது இதை தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸார் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.அதன்படி முக்கிய கடைவீதிகளில் ஏற்கனவே உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீஸார் மக்கள் நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகிறார்கள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸார் மைக் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

மேலும், ஆர்.கே.வி. சாலை, மணிக்கூண்டு உள்பட  3 இடங்களில் பெரிய டிஜிட்டல் போர்டு வைக்கப்பட்டு அதில் முக கவசம் அணிந்து வர வேண்டும் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் பெண்கள் கழுத்தில் நகைகள் அணிந்து வர வேண்டாம் குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் போன்ற விழிப்புணர்வு அடங்கிய  வாசகங்கள்  திரையிடப்பட்டு வருகிறது.

இதுதவிர முக்கிய கடைவீதிகளில் 15 இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தி மக்கள் நடமாட்டத்தை கட்டுப்பாட்டு அறைகள் மூலம் துல்லியமாக போலீஸார் கண்காணித்து வருகின்றனர்.

மேலும், பஸ்களில் பயணம் செய்யும் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவும் திருட்டை தடுக்கும் வகையில் குற்றப்பிரிவு போலீசார் 12 பேர் மாறுவேடங்களில் பயணிகளோடு பயணிகளாக  கலந்து பயணம் செய்து ரகசியமாக கண்காணித்து வருகின்றனர் மேலும் அவர்களிடம் பழைய குற்றவாளி புகைப்படங்கள் வைத்து அவர்கள் நடமாட்டங்களையும் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர் 


Top