logo
ஈரோட்டில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததால் மக்கள் நடமாட்டமின்றி காட்சியளித்த முக்கிய சாலைகள்

ஈரோட்டில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததால் மக்கள் நடமாட்டமின்றி காட்சியளித்த முக்கிய சாலைகள்

10/May/2021 04:45:42

ஈரோடு, மே: ஈரோட்டில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததால் நகரின் முக்கிய சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி காணப்பட்டது.

மிழகத்தில் கொரோனா 2-ஆவது அலை  தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தில் நேற்றைய ஒருநாள் பாதிப்பு 28 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் செய்து வருகிறது. ஏற்கெனவே கடந்த ஏப்ரல் மாதம் 20-ஆம் தேதி முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் நாளுக்கு நாள் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் மே10  முதல் வரும் 24 ஆம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மளிகை, டீக்கடை, பகல் 12 மணிவரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று 12 மணி வரை மளிகை காய்கறி கடைகள், டீக்கடைகள் செயல்பட்டன.அதைப்போல் உணவகங்கள், அம்மா உணவகங்கள் வழக்கம் போல் செயல்பட்டது. ஆனால் உட்கார்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்படவில்லை. காலை 6 மணி முதல் 10 மணி வரையும், பகல் 12 மணி முதல் 3 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையும் பார்சலில் மட்டும் உணவு வழங்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை மாநகர் பகுதியில் மட்டும் 13 இடங்களில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.பொதுவாகவே ஊரடங்கின் போது அம்மா உணவகங்களில் எப்போதும் தயாரிக்கும் உணவை விட கூடுதலாக உணவு தயாரிப்பது வழக்கம். அதைப்போல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் அம்மா உணவகங்களில் கூடுதலாக உணவு தயாரிக்கப்படுகிறது.

பால், பெட்ரோல் பங்க் வழக்கம் போல் செயல்பட்டன. இதேபோல்   மருத்துவமனைகள், மெடிக்கல் வழக்கம் போல் செயல்பட்டன. அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு எந்த ஒரு தடையும் இல்லை. மீன், கோழி முட்டை இறைச்சி கடைகள் மதியம் 12 மணி வரை செயல்பட்டது.ஆனால் இறைச்சி கடைகளில் வழக்கத்தை விட கூட்டம் குறைவாகவே இருந்தது. டாஸ்மாக் கடை செயல்படவில்லை.

 

பேருந்து போக்குவரத்து, டாக்ஸி ஆட்டோ போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டதால் ஈரோடு பேருந்து  நிலையம் மக்கள் நடமாட்டம் இன்றி  காணப்பட்டதுஇதேபோல் ஜவுளி கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்ததால் எப்போதும் பரபரப்பாக காட்சி அளிக்கும்  ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் பகுதி,ஈஸ்வரன் கோயில் வீதி, ஆர்.கே.வி.ரோடு மணிக்கூண்டு பகுதி, மக்கள் நடமாட்டம் இன்றி  காணப்பட்டது. வங்கிகள், அரசு தனியார் நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் பாதுகாப்பு வழிமுறைகளுடன் செயல்பட்டது. அதேபோல் தடுப்பூசிகளை வழக்கம்போல் போட்டுக் கொள்ள அனுமதி அளிக்கப்பட் டுள்ளது.

ஈரோடு சி பூங்கா பகுதியில் தற்காலிகமாக நேதாஜி பெரிய மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள், 50 -க்கும் மேற்பட்ட பழ கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு இரவு மொத்த வியாபாரமும் பகலில் சில்லரை வியாபாரம் நடந்து வருகிறது. எப்போதும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள், மக்கள் வந்து கொண்டே இருப்பதால்  பரபரப்பாக காட்சி அளிக்கும். மக்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருப்பதால் மாநகராட்சி சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி முழு ஊரடங்கு முடியும் வரை காலை 7 மணி வரை மட்டுமே சில்லறை விற்பனை நடைபெறும் என மாநகராட்சி ஆணையர் மா. இளங்கோவன் தெரிவித்துள்ளார். இதுபோல் இறைச்சி கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் வீடுகளுக்கு சென்று இறைச்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் தெரிவித்துள்ளார். இன்று காலை வழக்கம் போல் உழவர் சந்தையும் செயல்பட்டது.மக்கள் காலை முதலே ஆர்வத்துடன் காய்கறிகளை வாங்கி சென்றனர்.

Top