logo
அதிகாரம் மற்றும் பணபலத்தால் பீகாரில் ஆட்சியை தக்கவைத்துள்ளது பாஜக கூட்டணி: ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

அதிகாரம் மற்றும் பணபலத்தால் பீகாரில் ஆட்சியை தக்கவைத்துள்ளது பாஜக கூட்டணி: ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

11/Nov/2020 03:33:56

புதுக்கோட்டை:  பீகாரில் அதிகார பலம் மற்றும் பண பலத்தால் ஆட்சியை மீண்டும் தக்க வைத்து;ளளது பாஜக கூட்டணி என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்.

புதுக்கோட்டையில் இன்று(11.11.2020) செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: 29 சட்டங்களை 4 சட்டங்களாக சுருக்கி கடந்த 73 ஆண்டுகளாக இருந்து வந்த தொழிலாளர்களுக்கான உரிமையை பறித்துள்ளது மோடி அரசு. இச்சட்டத் திருத்தங்களை திரும்பப்பெற வலியுறுத்தி வருகின்ற 26-அன்று நாடுமுழுவதும் தொழிற்சங்கங்கள் நடத்த இருக்கின்ற பொது வேலை நிறுத்தத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கிறது.

மத்திய அரசு விவசாயிகளுக்கு விரோதமான மூன்று வேளாண் சட்டங்களை இயற்றியுள்ளது. நேரடியாக ஒப்பந்தம் செய்துள்ள கருப்பு விவசாயிகளுக்கு சுமார் ரூ.15 ஆயிரம் கோடி பாக்கி கரும்பு ஆலைகள் வைத்துள்ளன. ஒப்பந்த விவசாயச் சட்டம் இதற்கு தீர்வு காணுமா. தீபாவளியை முன்னிட்டு கொள்ளை லாபம் அடிப்பதற்காக பெரம்பலூரில் 2 ஆயிரம் டன் வெங்காயம் பதுக்கப்பட்டுள்ளது. 

புதிய வேளாண் சட்டம் பதுக்கலை தடைசெய்யும் சட்டத்தை திரித்துவிட்டது., விவசாயிகளுக்கு விரோதமான இந்த மூன்று சட்டங்களையும் எடப்பாடி அரசு ஆதரித்து இருக்கிறது. இந்நிலையில், நவ.26 தொழிற்சங்கள்கள் நடத்த இருக்கின்ற பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் வேளாண் சட்டங்களை திருப்பப்பெற வலியறுத்தும் கோரிக்கையோடு விவசாய அமைப்புகளும் பங்கேற்க இருக்கிறது.

பீகாரில் அதிகாரபலம், பணபலத்தை பயன்படுத்தி பாஜக கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது. உள்ளடி வேலை செய்து ஐக்கிய ஜனதா தளத்தை பாஜக பலவீனமடையச் செய்துள்ளது. லோக் ஜனசக்தி கட்சியினர் தங்களது வேட்பாளரை ஆதரித்தும், கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளத்தை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தச் செய்தது போன்ற உள்ளடி வேலைகளை செய்துள்ளது பாஜக. இந்தத் தேர்தலில் ராஷ்டிரிய ஜனதாதளம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருப்பதும், இடதுசாரிக் கட்சிகள் 16 இடங்களை வென்றிருப்பதும் முக்கியமான அம்சம்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் மனு ஸ்மிருதியில் உள்ளதைத்தான் சுட்டக்காட்டினார். அதற்காக அவர்மீது வழக்குப் பதிவு செய்வது கண்டிக்கத்தக்கது. மத நம்பிக்கையும், கடவுள் நம்பிக்கையும் தனி நபர் சார்ந்த விஷயம். அதில் யாரும் தலையிட முடியாது. அதே நேரத்தில் இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு.

இதில், ஆட்சி நிர்வாகத்திலோ, அரசியலிலோ மதத்தை கலப்பது  ஒருபோதும் அனுமதிக்க முடியாது. பொதுவாக ஆன்மீக யாத்திரையை யாரும் எதிர்ப்பதில்லை. ஆனால், பாஜக நடத்தும் வேல் யாத்திரை முழுக்க முழுக்க அரசியல் யாத்திரை. நீதிமன்றமும் இதை சுட்டிக்காட்டியுள்ளது. எடப்பாடி அரசோ அனுமதி மறுப்பு என்று கூறிக்கொண்டே அனுமதித்து வருகிறது.


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ஆண்டுக்கு நூறு நாள் வேலையும், நிர்ணயிக்கப்பட்ட கூலியும் வழங்கப்படுவதில்லை. இந்த குறைபாடுகள் களையப்படுவேதாடு, ரெங்கராஜன் குழு பரிந்துரைப்படி பேரூராட்டசிப் பகுதிகளுக்கும் இத்திட்டத்தை அமுல்படுத்த வேண்டும்.காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்தில் கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு அரசு போதுமான இழப்பீட்டை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். உள்ளூர் பகுதி கட்டுமானப் பணிகளுக்காகவும், மாட்டுவண்டித் தொழிலாளர்களை வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் புதுக்கோட்டை மாவட்டத்தில் மணல் மாட்டுவண்டி குவாரி வேண்டும். கோவில் நிலங்களில் குடியிருந்துவரும் ஏழை மக்களுக்கு வகைமாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும் என்றார் ஜி. ராமகிருஷ்ணன்.

 பேட்டியின் போது, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ராமையன், எஸ்.சங்கர், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ஜியாவுதீன் ஆகியோர் உடனிருந்தனர்.


Top