logo
புதுகை நகராட்சி ஆணையரைக் கண்டித்து ஊழியர்கள் இரவில் திடீர் தர்னா போராட்டம்

புதுகை நகராட்சி ஆணையரைக் கண்டித்து ஊழியர்கள் இரவில் திடீர் தர்னா போராட்டம்

06/Nov/2020 10:44:40

புதுக்கோட்டை நகராட்சி ஆணையரின் ஊழியர் விரோதப் போக்கைக் கண்டித்து ஊழியர்கள் வெள்ளிக்கிழமை இரவில் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை நகராட்சியில் வேலை செய்யக்கூடிய அலுவலக பணியாளர்களுக்கு கடந்த 2 மாதங்களாக ஊதியம் வழங்காத நிலை நீடிக்கிறது. மேலும் பொறுப்பில் இருக்கக்கூடிய ஆணையர் மரியாதை குறைவாக ஊழியரை பேசுவது தொடர்கதையாக உள்ளது.

இது தொடர்பாக அரசு ஊழியர் சங்கம், சிஐடியு உள்ளிட்ட தொழில்சங்க நிர்வாகிகள் பேச்சு நடத்துவதற்காக அணுகும் போது அதற்கு சரியான  மரியாதை கொடுத்து பதிலளிக்காமல் ஆணையர் ஜஹாங்கீர் பாஷா அலட்சியம் செய்யும் நிலை தொடர்கிறது. மேலும், புதுக்கோட்டையில் சமஸ்தான மன்னர்களைப் போல நகர் வலம் சென்று  ஏழை எளிய மக்களிடம் வரி வசூல் செய்வதில் மிகவும் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார்.

மேலும்,  பெண் ஊழியர்களை வேலை நேரத்தையும் கடந்து இரவு 9 மணி வரை பணியாற்ற வற்புறுத்தி வருகிறார் என்று புகார் தெரிவித்து நகராட்சி அலுவல வளாகத்தில் தரையில் அமர்ந்து  ஊழியர்கள் இன்று(6.11.2020)  தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பங்கேற்ற அனைவரும் நகராட்சி ஆணையரைக் கண்டித்து  முழக்கமிட்டனர்.

இதனிடையே நகராட்சி பொறியாளக் ஜீவாசுப்பிரமணியன்  சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடம் பெண் ஊழியர்களை கூடுதல் நேரம் வேலை செய்யத வேண்டாம் என்று  கூறிவிட்ட பிறகு இந்தப் போராட்டம் தேவையில்லாதது என்று கூறி  சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தினார்.

அப்போது, ஆணையர் நேற்று நடந்த பேச்சு வார்த்தையில் ஏற்றுக்கொண்ட விஷயங்களை செயல்படுத்தவில்லை எனவும், அவர் நேரில் வந்து பேச வேண்டும். அதுவரை  தங்கள் போராட்டம் தொடரும் எனவும், ஆணையரை அலுவலகத்தை விட்டு வெளியேற விட மாட்டோம் என்றும் ஊழியர்கள் தரப்பில் தொழில் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்நிலையில், தர்னாவில் ஈடுபட்டிருந்த பெண் ஊழியர்கள்  வீட்டுக்குச்சென்றனர். மற்ற தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

இதனிடையே, புதுக்கோட்டை நகராட்சி ஆணையரின் நடவடிக்கைகள் மக்கள் விரோதமாக உள்ளது. விரைவில் போராட்டம் அறிவிப்போம் என சிபிஐ(எம்) மாவட்டச் செயலாளர்  எஸ். கவிவர்மன்  அறிவித்துள்ளார்.

.

Top