logo

இன்றைய சிந்தனை - உலகில் நானே உயர்ந்தவன்..

29/Oct/2020 11:15:55

நான் என்னும் அகந்தை எந்த மனதில் அகந்தை இருக்கிறதோ அங்கு குழப்பமும் இருக்கும். என்னால்தான் எல்லாமே முடியும், நான் அனைவரிலும் சிறந்தவன் என்ற இறுமாப்பு, இறுதியில் தோல்வியையே கொடுக்கும்.

மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையில் தடையாக இருப்பது இந்த நான் என்னும் அகங்காரம்.  நான் என்ற உணர்வே அகங்காரம்.மனத்தின் அனுபவம் அனைத்திற்கும் சொந்தம் கொண்டாடிக் கொண்டிருப்பது இந்த நான் என்ற எண்ணம்...

வேலை செய்யும் இடமாகட்டும், மாமியார் மருமகள் உறவிலாகட்டும், கணவன் மனைவி இடத்தே ஆகட்டும், இங்கெல்லாம் உறவு முறை கெடுவதற்கு இந்த எண்ணமே காரணம்.நண்பர்கள் இடையே பிரிவு ஏற்படுவதும் இந்த எண்ணத்தினால்தான். இன்றிருப்போர் நாளை இருப்பதில்லை என்றிருக்க, நம்முள் ஏன் இந்த தலைக்கனம்.

நான்எனது என்பது அறியாமை. நாம்,நம்முடையது என்பது அறிவுடைமை.நாம் பூரண நிலையை அடைய விரும்பினால்,நான் என்னும் அகந்தையை முழுமையாக அகற்றி விடுவதே நல்லது. உலகில் மனிதன் கடைபிடிக்க வேண்டிய செயல்கள் எவ்வளவோ இருக்கின்றன. கருணை போன்ற நற்குணங்களை விருத்தி செய்ய வேண்டும். அகந்தை போன்ற தீய குணங்களை விட்டொழிக்க வேண்டும்.

ஆம் நண்பர்களே, அகந்தை. செருக்கு என்ற சொற்கள் ஆணவத்தை குறிக்கும்.ஆணவம் கொண்டவர்களை தலைக்கனம் பிடித்தவர்கள் என்றும் கூறுவார்கள். ஆணவ எண்ணம் கொண்டவர்கள் தங்கள் ஆணவ போக்கை அகற்றிக் கொள்ளவில்லை என்றால் பல இன்னல்களை அடைய நேரிடும். நான்தான் என்ற எண்ணத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் -உடுமலை சு. தண்டபாணி

Top