logo
தமிழகம் முழுவதும் 5 கோடி பனை விதைகளை நடவு செய்யும் திட்டம்: சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே சி கருப்பண்ணன் தொடங்கி வைத்தார்

தமிழகம் முழுவதும் 5 கோடி பனை விதைகளை நடவு செய்யும் திட்டம்: சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே சி கருப்பண்ணன் தொடங்கி வைத்தார்

26/Oct/2020 07:47:05

ஈரோடு:தமிழகம் முழுவதும் 5 கோடி பனை விதைகளை பொது இடங்களில் நடும் திட்டத்தை சுற்றுச்சூழல் துறை அமைச்சர்  கே.சி கருப்பண்ணன் பவானி அடுத்த ஓடத் துறை  ஏரி பகுதியில் இன்று(26.10.2020) தொடங்கி வைத்தார்.


ஜெயம் பிராணி நல அறக்கட்டளை, பனை விதைப்பு இயக்கம், உழவு  மரபுவழி பண்ணை யம் ஆகிய தொண்டு நிறுவனங்கள் ஏற்பாடு செய்திருந்த பனை விதை நடும் திட்டத்தை தொடக்கி வைத்த அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் கூறியதாவது:   தமிழகம் முழுவதும் தொண்டு நிறுவனங்களின் தொண்டர்கள் மூலம்  பனை விதைகள் சேகரிக்கப் பட்டு நீர்நிலைப் பகுதிகளான ஏரி குளம் குட்டை மற்றும் வாய்க்கால் இந்த பனை விதைகள் அடுத்த மூன்று மாதங்கள் நடப்படும். 

வரும் நாட்களில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப் படுவதால் இந்த பனை விதைகள்  முளைப்பதற்கு ஏதுவான சூழ்நிலை இருக்கும். இந்த பனை விதைகள் முளைத்து வளரும் போது அதன் வேர்கள் நீர்நிலைகளின் கரைகளில் மண் அரிமானத்தை தடுக்கும். மேலும் மழை நீரை வேர்களில் சேகரித்து வைத்துக் கொள்ளும் என்பதால் வறட்சியைத் தாங்கி இம்மரங்கள் வளரும்.

அடுத்த 15 ஆண்டுகளில் இம்மரங்கள் பலன் தரத்தொடங்கும் .இதனால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு இதன் மூலம் வருவாய் கிடைக்கும். ஆண் பனைமரங்கள் மூலம் கூட பதநீர் பெறலாம் .மேலும் அடுத்த நூறு ஆண்டுகளுக்கு இந்தப் பனை மரங்கள் மூலம் நுங்கு, பனங்கிழங்கு, பதநீர், பனை ஓலை போன்ற ஏராளமான பொருட்களை மக்கள் பெற வாய்ப்புள்ளது.

எனவே பனைமரங்களை பாதுகாத்து அவைகள் வளர அங்குள்ள பொதுமக்கள் உதவ வேண்டும். தற்போது  தமிழகத்தின் பல இடங்களில் பனைமரங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன அவைகளையும் பாதுகாத்து அதற்குரிய பயன்களை மக்கள் பெற வேண்டும் என்றார் அமைச்சர் கருப்பண்ணன்.

நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பிரபாகர், ஜெயம் பிராணி நல அறக்கட்டளை தலைவர் கே.வி. கோவிந்தராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Top