logo
வெங்கடேஸ்வரா மேனிலைப்பள்ளியில் விஜயதசமி விழா: நெல்லில் எழுதி பள்ளியில் சேர்ந்த குழந்தைகள்.

வெங்கடேஸ்வரா மேனிலைப்பள்ளியில் விஜயதசமி விழா: நெல்லில் எழுதி பள்ளியில் சேர்ந்த குழந்தைகள்.

26/Oct/2020 05:18:55

புதுக்கோட்டை, திருக்கோகர்ணம், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் விஜயதசமியையொட்டி புதிய மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. 

வெற்றிதரும் விஜயதசமி கற்றுக்கொள்ள நல்லநாள் என்பதற்கிணங்க ஆரம்பக்கல்வியை கற்றுக் கொள்ள ஆர்வமுடன் வந்த மழலைகளையும் பெற்றோர்களையும் பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி வரவேற்று இனிப்புகளை வழங்கி வித்யாரம்பம்  நிகழ்வான நெல்லில் தமிழ் முதல் எழுத்தான அ  என்ற எழுத்தை எழுத கற்றுக்கொடுத்தார்.

இந்நிகழ்வின் பின்னணி குறித்து கவிஞர் தங்கம்மூர்த்தி கூறியதாவது: எச்செயலைச் செய்தாலும் அதில் வெற்றி பெற வேண்டும் என்றே அனைவரும் விரும்புவர். அப்படிப்பட்ட வெற்றியை நமக்கு அருளும் திருநாள் விஜயதசமி. இந்த நாளில் புதிய தொழில்கள் தொடங்கினால் சிறக்கும் என்பது நம்பிக்கை. மேலும் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்க, இசை, பாட்டு, நடனம் போன்ற கலைகளைக் கற்கத் தொடங்கவும் இன்று உகந்த நாள்.

இந்த நாளில் அவரவர் தங்களின் குரு மற்றும் ஆசிரியரை சந்தித்து ஆசிபெறுவது மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இந்நாளில், குழந்தைகளுக்கு எழுத்துப்பயிற்சி தொடங்கினால் கல்வியில் சிறந்து விளங்குவர். இதனை ‘அட்சராப்யாசம்’ எனக்கூறுவார்கள் என்றார்.

முன்னதாக,  பள்ளிக்கு வந்த மழலைக் குழந்தைகள் ஆசிரியர்களின் கையைப்பிடித்து தாங்கள் அமர்ந்து படிக்க இருக்கும் வகுப்பறைகளை ஆர்வம் மற்றும் பெருமிதத்துடன் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.


Top