logo
 ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 2.11 லட்சம் பேருக்கு கொரோனா  பரிசோதனை

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 2.11 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை

25/Oct/2020 09:02:38

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பொது போக்குவரத்து தொடக்கம் காரணமாக பிற மாவட்டத்தில் இருந்து வரும் நபர்களால் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சுகாதாரத் துறையினர் மாநகராட்சி ஒருங்கிணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநகராட்சி பகுதியில் 5  இடங்களில் நிரந்தர கொரோனா  பரிசோதனை நிலையங்கள்  அமைக்கப்பட்டுள்ளன. 

இது தவிர, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா  பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மாவட்டம் முழுவதும் ஸ்கிரீனிங் சென்டர் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு நாள் ஒன்றுக்கு  2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா  பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பரிசோதனைகளை அதிகரித்து தொற்று நோயாளிகளை உடனடியாகக் கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. 

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 11 ஆயிரத்து 969 கொரோனா  பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.  இதில் இதுவரை 9,564 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும். நோய் பாதிப்பில் இருந்து இதுவரை 8 ஆயிரத்து 580 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 867 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது நோய் எண்ணிக்கையைவிட குணமடைந்து வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சுகாதாரத் துறையினர் நேற்று வெளியிட்ட பட்டியலில் மாவட்டத்தில் மேலும் 106 பேருக்கு தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில்,  நேற்று ஒரே நாளில் 104 பேர் சிகிச்சையில்  இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று 81 வயது முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 117 ஆக உள்ளது. பொது இடங்களில் சமூக இடைவெளி என்பது கேள்விக்குறியாகி உள்ளது. ஆங்காங்கே  மக்கள் கூட்டமாக சமூக இடைவெளியின்றி நடமாடி வருகின்றனர். பேருந்துகளில் அரசின் விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு கூடுதல் பயணிகள்  சமூக இடைவெளியின்றி பயணிப்பதைப் பார்க்கமுடிகிறது. குறிப்பாக முதியவர்கள்  உள்ள வீடுகளில் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. 

ஆனால், ஈரோட்டில் பெரும்பாலும் முதியவர்கள் முகக்கவசம்  இன்றி பொது வெளியில் சுற்றித் திரிவதையும் பார்க்க   முடிகிறது. மாவட்டத்தில் இதுவரை  கொரோனாவால்   உயிரிழந்தவர்களில்  பெரும்பாலானவர்கள் முதியவர்கள் தான். எனவே முதியவர்களை வீட்டில் உள்ளவர்கள் தேவையின்றி வெளியே அனுப்ப வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. இந்த விஷயத்தில் பொதுமக்கள் அலட்சியம் காட்ட வேண்டாம் எனவும் வலியுறுத்தியுள்ளது. 


Top