logo
ஆயுத பூஜை: ஈரோட்டில் அரிசி பொரி தயாரிப்பு பணிகள் தீவிரம்

ஆயுத பூஜை: ஈரோட்டில் அரிசி பொரி தயாரிப்பு பணிகள் தீவிரம்

23/Oct/2020 06:07:51

ஈரோட்டில் ஆயுத பூஜையை முன்னிட்டு பொரி தயாரிக்கும் பணியில் உற்பத்தியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

 தமிழகத்தில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை விமர்சையாக கொண்டாடப்படும். அந்த நாளில் வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம். அந்த பூஜைகளில் முதன்மையான பொருளாக பொரி வைத்து பூஜிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஆயுத பூஜை வருகிற 25ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்காக ஈரோட்டில் பொரி தயாரிக்கும் பணியில் உற்பத்தியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

  இதுகுறித்து, ஈரோடு பகுதியைச் சேர்ந்த பொரி உற்பத்தியாளர் கிருஷ்ணன் கூறியதாவது: கர்நாடகா மாநிலம் தாவணிக்கரை, மாண்டியா, மைசூர், கொள்ளேகால் போன்ற பகுதியில் இருந்து 64 என்ற பெயர் கொண்ட நெல் ரகத்தை கொள்முதல் செய்து, அரிசியாக மாற்றி பொரி தயாரிக்கிறோம். இங்கு தயாரிக்கும் பொரியினை சேலம், தர்மபுரி, நாமக்கல், வேலூர், திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர். கடந்த ஆண்டு 100 பக்கா கொண்ட மூட்டை ரூ.550 முதல் ரூ.600 வரை விற்பனை செய்யப்பட்டது. நடப்பாண்டு மூட்டைக்கு ரூ.50 முதல் ரூ.100 வரை விலை உயர்ந்துள்ளது.

 விறகு உள்ளிட்ட எரிபொருள், மின்சார கட்டணம், தொழிலாளர்கள் ஊதியம் உள்ளிட்டவை உயர்ந்துள்ளது. ஆனால் பொரி விற்பனை விலை மட்டும் செலவுக்கு ஏற்றவாறு மாறவில்லை. இதனால் பொரி உற்பத்தியாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர கொரோனா பொது முடக்கம் காரணமாக தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.  இதனால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தொழிற்சாலைகளில் இருந்து பொரி ஆர்டர்கள் குறைந்துவிட்டது.

  ஈரோட்டில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை 10-க்கும் மேற்பட்ட பொரி உற்பத்தியாளர்கள் இருந்தனர். பொரி தேவை குறைந்ததன் காரணமாக தொழில் நலிவடைந்து, தற்போது சில உற்பத்தியாளர்கள் மட்டுமே உள்ளனர்.


Top