logo
புதுகை இயற்கை விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனத்தில் அரசு ஆணையர் ககன்தீப் சிங்  ஆய்வு

புதுகை இயற்கை விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனத்தில் அரசு ஆணையர் ககன்தீப் சிங் ஆய்வு

23/Oct/2020 09:00:25

புதுக்கோட்டை இயற்கை விவசாயிகள் உற்பத்தியாளர் கம்பெனியை அரசின் வேளாண் உற்பத்தி ஆணையர்,  ககன்தீப்சிங்  வியாழக்கிழமை நேரில் வருகை தந்து கம்பெனி  செயல்பாடுகளை பார்வையிட்டார்.

 புதுக்கோட்டை இயற்கை விவசாயிகள் உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட் (POFPCL) என்பது விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனமாகும். இது 1028 சிறு மற்றும் குறு விவசாயிகளை பங்குதாரர்களாக உள்ளடக்கிய ஒரு கம்பெனியாகும்  கம்பெனி சட்டம், 2013-ன் கீழ் ஒரு சட்டப்பூர்வ கம்பெனியாக 2014-இல் பதிவு செய்யப்பட்டு நடைமுறைக்கு வந்தது.

சமூக கல்விக்கான கிராமப்புற அமைப்பு (ரோஸ்) என்ற தொண்டு நிறுவனம் இந்த உற்பத்தியாளர் கம்பெனியை ஊக்குவித்தது. மழைப்பொழிவு நிலங்களில் பாரம்பரிய நெல் மற்றும் சிறுதான்ய வகைகளை இயற்கை முறைகளைப் பயன்படுத்தி விவசாயம் செய்யவும், விளைவித்த விவசாயப் பொருட்களுக்கு மதிப்பு கூட்டவும். நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் சிறு மற்றும் குறு விவசாயிகளின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தி பாரம்பரிய நெல் மற்றும் சிறுதான்ய வகைகளை பாதுகாப்பதுமே இதன் முக்கிய நோக்கமாகும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1028 சிறு, குறு விவசாயிகளை உறுப்பினர்களாகக் கொண்டு செல்லப்பா நகரில் இயங்கி வரும் புதுக்கோட்டை இயற்கை வேளாண் உற்பத்தியாளர் வணிக நிறுவனத்தை தமிழக அரசின் வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப்சிங் பேடி  வியாழக்கிழமை பார்வையிட்டனர்.

சிறு, குறு விவசாயிகளின் நலனுக்காக செயல்பட்டுவரும் இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து தற்போது நோய்கள் பெருகிவரும் நிலையில், வேளாண் வணிகத் துறை வழிகாட்டுதலில், உற்பத்தியாளர் வணிக நிறுவனத்தில் 24 வகையான பாரம்பரிய நெல் ரகங்களில் குறிப்பாக மிளகி, கருப்புக்கவுனி, சிவப்புக்கவுனி, யானைக்கொம்பன், தங்கச்சம்பா, தூயமல்லி, மாப்பிள்ளைச்சம்பா, இலுப்பைப் பூ சம்பா போன்றவற்றையும்.

சிறுதானியங்களான வரகு, குதிரைவாலி, சாமை, தினை, கேழ்வரகு, சோளம், கம்பு ஆகிய ரகங்களையும், சிறுதானியம், பாரம்பரிய நெல் ரகங்கள், பயறு வகையிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட அரிசி, மாவு, அவல், பருப்பு போன்ற ரகங்களையும், சிறுதானியம் அரைக்கும் இயந்திரங்களையும் பார்வையிட்டார்.

மேலும், இந்த வணிக நிறுவனத்தின் செயல்பாடுகள், விவசாயிகளுக்குக் கிடைக்கும் லாபம், இயக்குநர்களின் செயல்பாடுகள், இங்குள்ள இயந்திரங்களால் விவசாயிகள் அடையும் பயன்கள், எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

 நிறுவனத்தின் செயல்பாடுகள், பாரம்பரிய இயற்கை விவசாயத்தால் விவசாயிகள் அடையும் நன்மைகள் குறித்து நிறுவனத்தின்  முதன்மை செயல் அலுவலர் அகிலா விளக்கமளித்தார்.

முன்னதாக, உற்பத்தியாளர் வணிக நிறுவன நிர்வாக இயக்குநர் ஏ. ஆதப்பன் வரவேற்றார். இதில்,   இயக்குநர் ஜி.எஸ். தனபதி, வேளாண் இணை இயக்குநர்  சிவகுமார்,  வேளாண் அலுவலர் வி.ராஜசேகர் மற்றும் விவசாயிகள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Top