logo
ஈரோடு அரசு மருத்துவமனையில் கொரோனா பாதித்த 28 பேருக்கு சிகிச்சை 20 பேர் அறிகுறியுடன் அனுமதி

ஈரோடு அரசு மருத்துவமனையில் கொரோனா பாதித்த 28 பேருக்கு சிகிச்சை 20 பேர் அறிகுறியுடன் அனுமதி

22/Oct/2020 11:02:54

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆரம்பத்தில் ஒற்றை இலக்கத்தில் இருந்த பாதிப்பு தற்போது ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதையடுத்து, ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முழுநேர கொரோனா  சிகிச்சை மருத்துவமனையாக மாற்றப்பட்டது. இங்கு 500 -க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து வைரஸால் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்த காரணத்தால் ஈரோடு அரசு மருத்துவமனை, தனியார் திருமண மண்டபங்கள் கல்லூரிகள் பள்ளிகள் என கொரோனா சிகிச்சைக்காக  சிறப்பு வார்டுகள் ஒதுக்கப்பட்டன.

அதன்படி, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக  200 படுக்கை வசதிகளுடன்  தனி வார்டு அமைக்கப்பட்டது.  இதற்கென்று தனியாக  நியமிக்கப்பட்ட மருத்துவர்களும் செவிலியர்களும் 24 மணி நேரமும் கொரோனா  பாதித்த நோயாளிகளை கவனித்து வந்தனர். 

சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளின் மன அழுத்தத்தை போக்க அவர்களுக்கு யோகா பயிற்சியுடன் அவர்களுக்கு தேவையான சத்துள்ள உணவுகள் சரியான நேரத்தில் வழங்கப்பட்டு வந்தன.

 இதன் காரணமாக  நோயாளிகள் விரைவில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  வைரஸ் பாதித்த 28 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அறிகுறியுடன் 20 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சிலருக்கு நோய் பாதிப்பு இல்லை என்ற  முடிவு தெரிய வந்துள்ளது. இன்னும் சிலருக்கு முடிவு வரவேண்டியுள்ளது. முடிவு வந்தவுடன் அதற்கு தகுந்தார்போல் சிகிச்சை அளிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், கடந்த 4 நாட்களாக மாவட்டத்தில் வைரஸால் பாதித்தவர்கள்  எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில் நேற்று மீண்டும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒரே நாளில் பாதிக்கப்பட்டனர். நேற்று சுகாதார துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மாவட்டத்தில் மேலும் 108 பேருக்கு வைரஸ் உறுதி செயப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நேற்று ஒரே நாளில் 119 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

தற்போது 916 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 47 வயதுப் பெண் மற்றும் 78 வயது மூதாட்டியை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 115  ஆக உயர்ந்துள்ளது. முதியவர்கள் தொடர்ந்து உயிரிழந்து வருவது பீதியை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம் என்றும் தொடர்ந்து அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். 


Top