logo
எம்.எஸ் சுவாமிநாதன் நிறுவனம்,புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி சார்பில் உலக உணவு தினம்

எம்.எஸ் சுவாமிநாதன் நிறுவனம்,புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி சார்பில் உலக உணவு தினம்

20/Oct/2020 09:45:33

புதுக்கோட்டை அறிவியல் இயக்க கூட்டரங்கில் நடைபெற்ற  நிகழ்ச்சிக்கு இந்திய விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் ஜி எஸ் தனபதி தலைமை வகித்து பேசுகையில், எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், உணவு உற்பத்தியை பெருக்கவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.  

நாட்டின் உணவு உற்பத்தி அதிகரித்து இருந்தாலும் அனைவருக்கும் சரிவிகித உணவு கிடைப்பது சவாலாகவே உள்ளது. அனைவருக்கும் சரிவிகித உணவு கிடைப்பதை உறுதிப்படுத்தினால்தான் நாம் உணவில் தன்னிறைவு அடைந்து உள்ளோம் என்று கூறமுடியும். உணவு வீணடிக்கப்படுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்  என்பதனை  இந்த உணவு தினத்தின் முக்கிய செய்தியாக எடுத்துச் செல்ல வேண்டும் என்றார்.

எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன ஒருங்கிணைப்பாளர் ஆர் ராஜ்குமார் உலக உணவு தினம் குறித்து பேசுகையில், உலக உணவு தினம் உணவு மற்றும் வேளாண் நிறுவனம் 1945  -இல் தொடங்கப்பட்டதை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

இந்தியா உணவு உற்பத்தியில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. சுமார் 296 மில்லியன் டன் உணவு உற்பத்தியை நமது விவசாயிகள் உற்பத்தி செய்துள்ளார்கள்.  கொரோனா ஊரடங்கு சமயத்தில் பல்வேறு சவால்களை விவசாயிகள் சந்தித்த போதிலும் அவருடைய கடின உழைப்பால் காரிப் பருவ சாகுபடி பரப்பளவு 110 மில்லியன் ஹெக்டேர் அதிகரித்துள்ளது.  பல்வேறு சவால்களுக்கு இடையில் உணவு உற்பத்தியில் சாதனை படைத்துள்ள விவசாயிகளை நாம் கொண்டாட வேண்டும் என்றார்.

பருவகால மாற்றம்,  வெள்ளம், வறட்சி போன்ற சவால்களை சமாளித்து உணவு உற்பத்தியை பெருக்கி வருமானத்தை அதிகப்படுத்த விவசாயிகளுக்கு உதவ வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் வளங்குன்றா வளர்ச்சிக்கான இலக்குகளில் ஒன்றான, நாட்டில் ஒருவர் கூட உணவு கிடைக்காமல் இருக்கக்கூடாது என்ற இலக்கினை அடைய அனைவரும் பங்காற்ற வேண்டும் என்றார்.

நிகழ்ச்சிக்கு, நக்கீரர் தென்னை கூட்டுப்பண்ணை உற்பத்தியாளர்கள் நிறுவனத் தலைவர் சா.வே காமராசு முன்னிலை வகித்தார்.  புதுக்கோட்டை வேளாண் அலுவலர் (தரக்கட்டுப்பாடு)  எஸ். முகமது ரபி, முன்னோடி விவசாயிகள் பி. ஸ்டெல்லா மேரி, ஏ. கிருஷ்ணன், புஷ்கரம் வேளாண்அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர்கள் எம் . ஐஸ்வர்யா,  எஸ்.  வினோதினி, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட துணைத்தலைவர் எம். வீரமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 60 விவசாயிகள் கலந்து கொண்டனர். எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன திட்டங்களை கிராமங்களில் சிறப்பாக செயல்படுத்த உதவிய விவசாயிகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. 

எம்  எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன அலுவலர் டி . விமலா அனைவரையும் வரவேற்றார். தொழில்நுட்ப அலுவலர் ஆர் .வினோத் கண்ணா நன்றி கூறினார். 

 


Top