logo
சிவகங்கை அருகே சுமார் 2,500 ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால கல்வட்டம் கண்டெடுப்பு

சிவகங்கை அருகே சுமார் 2,500 ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால கல்வட்டம் கண்டெடுப்பு

17/Oct/2020 09:43:14

சிவகங்கை: இப் பெருங்கற்காலக்கல்வட்டம் குறித்து, சிவகங்கை அருகே கொல்லங்குடியைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்  புலவர் கா. காளிராசா கூறியதாவது: சங்க காலத்தோடு தொடர்புடையதாக ஒக்கூர் அறியப்பட்டுள்ளது. ஒக்கூர் மாசாத்தியார் பாடல்கள் சங்க இலக்கியங்களான அகநானூறு, குறுந்தொகை, புறநானூறு ஆகியவற்றில் இடம் பெற்றுள்ளன.

பெருங்கற்காலத்தில் இறந்த மனிதனை புதைத்த இடத்தில், அவரது நினைவாக கல் வட்டம் அமைத்து வழிபட்டு வந்ததாக சான்றுகள் உள்ளன. இந்த கல்வட்டங்கள் தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது. கல்திட்டை, கல்பதுக்கை, குடைக்கல், குத்துக்கல் அல்லது நெடுங்கல் போன்றவை பெருங்கற்கால அமைப்பு முறைகளாகும்.

சிவகங்கை அருகே ஒக்கூர் அண்ணாநகரில் முதன்மைச் சாலையின் கிழக்குப் பக்கத்தில் பழமையான கல் வட்டங்கள் காணப்படுகின்றன. பொதுவாக, கல்வட்டம் மலைப் பகுதிகளில் வெள்ளை கல்லாலும், செம்மண் பகுதிகளில் செம்பூரான் கற்களாலும் அமைக்கப் பெறும்.

ஒக்கூரில் உள்ள கல்வட்டம் வெள்ளை மற்றும் செம்பூரான் ஆகிய இரண்டு கற்களாலும் அமைக்கப்பட்டுள்ளது. அதனருகே குத்துக்கல் ஒன்று அப்புறப்படுத்தப்பட்டு கிடைமட்டமாக உள்ளது. மேலும், அந்தப் பகுதியில் கற்பதுக்கை ஒன்றும் காணப்படுகிறது. இவைதவிர, சிதைந்த தாழி ஓடுகள் மண்ணின் மேற்பரப்பில் சிதறிக் கிடக்கின்றன.

கல்வட்டம், கற்பதுக்கை, தாழிகள் உள்ள ஈமக்காடுகளில் மூத்தோர் வழிபட்ட இடத்தில் தொடர்ந்து வழிபடும் முறை இன்றும் மக்களிடையே இருந்து வருகிறது. அதனடிப்படையில், இந்த கல்வட்டத்தை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இன்றும் வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போது கல் வட்டங்கள் பெரும் சேதமடைந்துள்ளன. இந்த கல்வட்டங்கள் ஒக்கூர் மசாத்தியார் வாழ்ந்த காலத்தின் ஈமக்காடாக இருக்கலாம் என்றார்.


Top