logo
பத்திரிகையாளர்கள் பணி நீக்கத்திற்கு எதிரான புகார் மனுக்கள் மீது விசாரணை தொடங்கியது.

பத்திரிகையாளர்கள் பணி நீக்கத்திற்கு எதிரான புகார் மனுக்கள் மீது விசாரணை தொடங்கியது.

16/Oct/2020 12:00:46

சென்னை:  பத்திரிகையாளர்கள் பணி நீக்கத்திற்கு எதிரான புகார் மனுக்கள் மீதான தொழிலாளர் துறை உதவி ஆணையரகத்தில் விசாரணை நேற்று விசாரணை தொடங்கியது.

தி இந்து, இந்து தமிழ் திசை நாளிதழ்கள் மற்றும் மாலைமுரசு டிவியில் பத்திரிகையாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக சென்னைப் பத்திரிகையாளர் சங்கத்தின் (MUJ) சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனையடுத்து, பணி நீக்கம் சட்டவிரோதமானது என்றும், மீண்டும் பணி வழங்க ஆணையிடக் கோரியும் குறளகத்தில் உள்ள தொழிலாளர் துறை உதவி ஆணையரிடம் முறையிடப்பட்டது. இந்த மனுக்கள் அனைத்தும் நேற்று (14-10-2020) விசாரணைக்கு வந்தன.

 1. தி இந்து நாளிதழ்: தி இந்து குழுமத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் மாதவன், சங்கரநாராயணன் ஆகியோர் தொழிலாளர் உதவி ஆணையரிடம் புகார் அளித்திருந்தனர். இந்த மனுக்கள் நேற்று (14-10-2020) விசாரணைக்கு வந்தன. அப்போது நிர்வாகத்தின் தரப்பில், பணி நீக்கம் செய்வது தொழிலாளர் விரோத நடவடிக்கை இல்லை என்றும், மீண்டும் பணி வழங்க இயலாது என்றும் வாதிடப்பட்டது. ஆங்கிலத்தில் இருக்கும் புகார் மனுக்களைத் தமிழில் கொடுத்தால்தான் பதிலளிக்க இயலும் என்றும் நிர்வாகத் தரப்பு தெரிவித்தது. உதவி ஆணையரும் இதையே வலியுறுத்தியதால், மனுக்கள் தமிழில் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றின் மீது பதிலளிக்க நிர்வாகம் அவகாசம் கோரியதை அடுத்து, விசாரணை அக்டோபர் 20 -ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

2. இந்து தமிழ் திசை நாளிதழ்:

இந்து தமிழ் திசை நாளிதழில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட பத்திரிகையாளர் செல்லப்பா சார்பாகக் கொடுக்கப்பட்ட புகார் மனுவும் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒப்பந்தப் பணியில் (காண்ட்ராக்ட்) இருப்பவர்களின் மனுக்களை விசாரணைக்கு எடுக்க முடியுமா என உதவி ஆணையர் கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக கேரள உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் அளித்துள்ள தீர்ப்புகளைச்  சுட்டிக்காட்டி விசாரணைக்கு எடுக்கலாம் என வாதிடப்பட்டது. உதவி ஆணையர் இதனை ஏற்றுக்கொண்டார். நிர்வாகத்தின் தரப்பில் யாரும் வராததால், மனு மீதான விசாரணை அக்டோபர் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

3. மாலை முரசு டிவி:

மாலை முரசு டிவியில் பணி நீக்கம் செய்யப்பட்ட பத்திரிகையாளர் பாலசுப்பிரமணியம் சார்பாகப் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவும் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நிர்வாகத் தரப்பு, புகார் மனுவின் நகல் கிடைக்காததால் பதிலளிக்க இயலாது எனத் தெரிவித்தது.

இது பற்றிய விவாதத்தில் நிர்வாகத் தரப்பின் பதில்கள் முரண்பாடாக இருந்தபோதும் புகார் மனுவின் நகலை உதவி ஆணையர் வழங்கினார். இது குறித்துப் பதிலளிக்க நிர்வாகத் தரப்பு அவகாசம் கோரியதை அடுத்து, விசாரணை அக்டோபர் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

இந்த விசாரணைகளில் பாதிக்கப்பட்ட  பத்திரிகையாளர்களுடன் MUJ சார்பில் மணிமாறன் கலந்துகொண்டார். 


Top