logo
ஈரோட்டில் கடந்த ஒரு மாதத்தில்  3,883 பேர் கொரோனாவால் பாதிப்பு

ஈரோட்டில் கடந்த ஒரு மாதத்தில் 3,883 பேர் கொரோனாவால் பாதிப்பு

15/Oct/2020 03:20:26

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவைரஸ் வேகமாக பரவி வருகிறது தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். முதலில் மாநகராட்சி பகுதியில் வேகமாக பரவிய வைரஸ் தொற்று தற்போது மாவட்டம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது.

வைரஸ் வீரியம் அதிகரித்து காணப்படுவதால் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக முதியவர்கள் அதிக அளவில் வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்து வருகின்றனர். வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்களுக்கு   அறிகுறி இல்லாமல் வேகமாக பரவி வருகிறது. தினமும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா  பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள  புள்ளி விவரப்பட்டியலில் மாவட்டத்தில் மேலும் 127 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 8,648 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் நேற்று ஒருநாள் மட்டும் வைரஸ் பாதிப்பிலிருந்து 131 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தார் எண்ணிக்கை 7,522 ஆக உயர்ந்துள்ளது. தற்போது ஆயிரத்து 22 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 104 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஒரு மாதத்தில் அதாவது செப்டம்பர் 14-ஆம் தேதி முதல் அக்டோபர் 14ம் தேதி வரை 3883 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதேபோல் இந்த ஒருமாத கால கட்டத்தில் 3676 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த ஒருமாத கால கட்டத்தில் 43 பேர் பலியாகி உள்ளனர். மாவட்டத்தில் பாதிப்பு எந்த அளவுக்கு ஏற்படுகிறதோ அதே அளவிற்கு குணமடைந்து வருவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது சற்று ஆறுதலை  ஏற்படுத்தி வருகிறது.

மக்கள் பொது இடங்களில் சமூக இடைவெளியை முறையாக கடைபிடிப்பதில்லை. அதேபோல் முக கவசம் அணிந்து இருந்தாலும் அவற்றை முறையாக அணிவதில்லை. இன்னும் சிலர் முக கவசம் அணியாமல் இன்னும் வெளியே சுற்றிக் கொண்டு உள்ளனர். இதுபோன்ற அலட்சியப் போக்கால் மாவட்டத்தில் வைரஸ் பரவும் சூழ்நிலை அதிகரித்துள்ளது. நாம் செய்யும் சிறு சிறு தவறு கூட பெரிய விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகள் நடைமுறைகள் அனைத்தும் நமக்காக தான் என்று மக்கள் புரிந்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து கொரோனா பாதிப்பில்  இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று  சுகாதாரத்துறையினர்  தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்

Top