logo
சென்னிமலையில் ஏஐடியுசி கைத்தறி நெசவுத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சென்னிமலையில் ஏஐடியுசி கைத்தறி நெசவுத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

14/Oct/2020 05:44:14

 கைத்தறி நெசவுத் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு அறிவித்தபடி கொரோனா நிவாரண நிதி ரூ.2000 வழங்குவது உள்பட  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏஐடியுசி-ஈரோடு மாவட்ட கைத்தறி நெசவுத் தொழிலாளர் சங்கம் சார்பில் சென்னிமலையில் இன்று (14-10-2020)  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோரிக்கைகள் தமிழக அரசு அறிவித்தபட, நலவாரியத்தில் இருந்து நிதியுதவி பெறாத அனைத்து கைக்தறி நெசவாளர்களுக்கும் நிபந்தனையின்றி ரூ.2000/-கொரோனா நிவாரண நிதி வழங்க வேண்டும். நெசவாளர்களின் மாதாந்திர ஓய்வூதியத்தை மாதம் ரூ3,000 ஆக உயர்த்த வேண்டும்; ஓய்வூதியத்தை மாதந்தோறும் 5 ஆம் தேதிக்குள் தவறாமல் வழங்க வேண்டும்சென்கோப்டெக்ஸ் நெசவாளர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி சட்ட விரோதமாகவும், ஜனநாயக விரோதமாகவும் அறிவித்துள்ள நிர்வாகக் குழுவை ரத்து செய்து முறையாகத் தேர்தல் நடத்த வேண்டும்.

  தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாகச் செயல்பட்ட தேர்தல் அதிகாரி திரு.வே.சேரன் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் தேங்கியுள்ள சரக்குகளை கோ-ஆப்டெக்ஸ் மூலம் உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும்; அனைத்து நெசவாளர்களுக்கும் வாரத்தில் ஆறு நாட்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு தமிழக அரசு வழங்க வேண்டிய தள்ளுபடி மானியத்தை (ரிபேட் பாக்கி) உடனடியாக வழங்க வேண்டும். கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் பெற்றுள்ள காசுக் கடனுக்கும், நெசவாளர்கள் பெற்றுள்ள வங்கிக் கடனுக்கும் கொரோனா காலத்திற்கு வட்டியைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.

சென்னிமலை பேருந்து நிலையம் அருகில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றியத் தலைவர் சி.கண்ணுசாமி தலைமை வகித்தார். சங்க ஒன்றியச் செயலாளர் ஆர்.ரவி, சங்க ஒன்றியப் பொருளாளர் மு.பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஏஐடியுசி மாநிலச் செயலாளர் எஸ்.சின்னசாமி, சங்க மாவட்டத் தலைவர்  .சித்தையன், சங்க மாவட்டப் பொருளாளர்  எஸ்.பொன்னுசாமி, தற்சார்பு விவசாயிகள் சங்கத் தலைவர்  கி.வே.பொன்னையன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். சென்கோப்டெக்ஸ்,காளிக்கோடெக்ஸ், ஜீவா டெக்ஸ் உள்ளிட்ட பல்வேறு நெசவாளர்கள் சங்கங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆண், பெண் நெசவாளர்கள் கலந்து கொண்டனர்.

போராட்ட அறிவிப்பு  போராட்டத்தின் நிறைவாக, மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறினால், 15 நாள்களுக்குப் பின்னர், மாவட்டம் முழுவதும் உள்ள கைத்தறி நெசவாளர்களைத் திரட்டி, ஈரோட்டில் உள்ள கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என தொழில் சங்க நிர்வாகிகள் அறிவித்தனர்.                                                                         

Top