logo
வாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தி  அலுவலகத்தில் முடி திருத்துவோர், அழகு கலை நிபுணர்கள் மனு

வாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தி அலுவலகத்தில் முடி திருத்துவோர், அழகு கலை நிபுணர்கள் மனு

26/Apr/2021 05:53:34

ஈரோடு, ஏப்: வாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தி முடி திருத்துவோர், அழகு கலை நிபுணர்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

 தமிழகத்தில் தற்போது கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு இரவு நேரஊரடங்கு,ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று முதல் மேலும் புதிய கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. அதன்படி மாநகராட்சி, நகராட்சி  பகுதியில் இயங்க கூடிய சலூன் கடைகள்பியூட்டி பார்லர் கடைகளுக்கு இன்றுமுதல் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஈரோடு மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் திங்கள்கிழமை ன்று தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பிலும், ஈரோடு மாவட்ட அழகு கலை நிபுணர்கள் சங்கம் சார்பிலும் நிர்வாகிகள் தொழிலாளர்கள் திரண்டு வந்து நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் தங்களது கோரிக்கை  மனுவை செலுத்தினர்.

 அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: கடந்த வருடம் கொரோனா தாக்கம் காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் 6 மாதங்கள்  சலூன் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இந்த தொழிலை நம்பி இருந்த ஏராளமான தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர். அரசு அறிவித்த ரூ. 2000  நிவாரண உதவி கூட ஒரு சிலருக்கு மட்டுமே கிடைத்தது. பெரும்பாலான  தொழிலாளர்களுக்கு கிடைக்கவில்லை. சில தொழிலாளர்கள் தற்கொலை  செய்துள்ளனர். இன்னமும் பொருளாதாரச் சரிவிலிருந்து  மீளாமல் உள்ளோம்.

 

இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து உள்ளதால் மாநகராட்சி நகராட்சி பகுதி இயங்கக்கூடிய சலூன் கடைகள் திங்கள்கிழமை  முதல் அடைக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. ஏற்கெனவே பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள எங்களுக்கு இந்த அறிவிப்பு மேலும் ஒரு பேரிடியாக தாக்கியுள்ளது. மீண்டும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே தமிழகஅரசு வெளியிட்டுள்ள  இந்த அறிவிப்பை மறுபரிசீலனை செய்து  ஈரோடு மாநகராட்சி, பவானி கோபி சத்தியமங்கலம் புஞ்சை புளியம்பட்டி ஆகிய நகராட்சி பகுதியில் இயங்கக்கூடிய சலூன் கடை களை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளுடன் நாங்கள் தொழிலைச் செய்ய தயாராக இருக்கிறோம். அப்படி இல்லை என்றால் நேரக் கட்டுப்பாடுகள் விதித்து சலூன் கடை களை தொடர்ந்து இயங்க அனுமதி அளிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளனர்.


இதேபோல் ஈரோடு மாவட்ட அழகுக் கலை நிபுணர்களும் ஆட்சியர்  அலுவலகத்திற்கு வந்து தங்களது வாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தியும், மீண்டும் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் பியூட்டி பார்லர்களை திறக்க  வலியுறுத்தியும் பெட்டியில் கோரிக்கை மனுவைச் செலுத்தினர்.

 

Top