logo
இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பானர்ஜி மரணம்

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பானர்ஜி மரணம்

21/Mar/2020 03:23:32

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பி.கே.பானர்ஜி மரணம் அடைந்தார். அவரது மறைவிற்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனான பிரதீப் குமார் பானர்ஜி வயது முதிர்வு காரணமாக நேற்று பகலில் மரணம் அடைந்தார். தனது 16 வயதில் சந்தோஷ் கோப்பை கால்பந்து போட்டியில் அறிமுகமான பி.கே.பானர்ஜி 1955-ம் ஆண்டு முதல் 1967-ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக விளையாடினார். அவர் 84 சர்வதேச போட்டிகளில் விளையாடி 65 கோல்கள் அடித்துள்ளார். 1962-ம் ஆண்டில் ஜகர்தாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய கால்பந்து அணியில் இடம் பிடித்து இருந்த அவர் 1958, 1966-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியிலும் பங்கேற்றுள்ளார். 1956-ம் ஆண்டு மெல்போர்னில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 4-வது இடம் பிடித்த இந்திய அணியில் இடம் பெற்ற அவர், 1960-ம் ஆண்டு ரோமில் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை கவனித்தார். அர்ஜூனா மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை பெற்ற அவர் 2004-ம் ஆண்டில் சர்வதேச கால்பந்து சங்கத்தின் (பிபா) ஆர்டர் ஆப் மெரிட் என்னும் உயரிய விருதை தன்வசப்படுத்தினார்.

இந்திய கால்பந்தின் சிறந்த வீரர்களில் ஒருவராக விளங்கிய பி.கே.பானர்ஜி மறைவுக்கு, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜிஇரங்கல் தெரிவித்துள்ளார். அகில இந்திய கால்பந்து சம்மேளனம், ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பிலும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது

Top