logo
முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறந்து 125-வது ஆண்டு நிறைவு: விவசாயிகள் பொங்கல் வைத்து மரியாதை

முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறந்து 125-வது ஆண்டு நிறைவு: விவசாயிகள் பொங்கல் வைத்து மரியாதை

11/Oct/2020 04:04:19

கூடலூர்:முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு 125 ஆண்டு நிறைவடைகிறது. இதை நினைவுகூரும் வகையில் விவசாயிகள் பொங்கல் வைத்தும், பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை செய்தனர்.

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் நீர்ப்பாசன ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்கிறது. இந்த அணையை இங்கிலாந்து பொறியாளர் பென்னிகுவிக் கட்டினார். அவரை போற்றும் வகையில் அவருக்கு தமிழக அரசு கூடலூர் லோயர்கேம்பில் நினைவு மணிமண்டபமும், முழு உருவ வெண்கலசிலையும் அமைத்துள்ளது.

கடந்த 1895-ஆம் ஆண்டு பென்னிகுவிக் இந்த அணையை கட்டி முடித்தபின் அக்டோபர் மாதம் 10-ஆம் தேதி முதன்முதலாக தமிழக பகுதிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இவ்வாறு தண்ணீர் திறந்து விடப்பட்டு நேற்றுடன் 125 ஆண்டு முடிவடைகிறது.

இதை முன்னிட்டு 5 மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் பென்னிகுவிக் மணிமண்டபம் முன்பு பொங்கல் வைத்து அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் குருவனாற்று பாலத்தில் இருந்து முல்லைப்பெரியாற்றில் மலர்கள் தூவி விவசாயிகள் வழிபாடு செய்தனர்.

முல்லைப்பெரியாறு அணை கட்டும் பணி கடந்த 1887-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ஆம்தேதி தொடங்கி 1895-ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டு அதே வருடம் அக்டோபர் 10-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் உயரம் 155 அடியாகும். இதன் கொள்ளளவு 15.5 டி.எம்.சி (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி தண்ணீர்)ஆகும்.

தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக 1886-ம் ஆண்டு ஜனவரி 1- ஆம் தேதி அன்றைய சென்னை மாகாணத்திற்கும், திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கும் இடையே 999 ஆண்டு காலத்துக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி சென்னை மாகாணம் திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு ஒரு ஏக்கருக்கு ஆண்டு வாடகையாக ரூ.5 கட்டவேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டது. 


Top