10/Oct/2020 06:51:06
மஞ்சள் நகரமாக திகழும் ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகள் பலர் மஞ்சள் பயிரை அதிகமாக சாகுபடி செய்து வருகிறார்கள். குறிப்பாக காலிங்கராயன் வாய்க்கால் பாசன பகுதியில் தொடர்ந்து 10 மாதங்கள் தண்ணீர் திறக்கப்படுவதால் அந்த பகுதிகளில் மஞ்சள் சாகுபடி செய்யப்படுகிறது. புவிசார் குறியீடு பெற்ற ஈரோடு மஞ்சள் தரமாக இருப்பதால், வெளிமாநிலத்தை சேர்ந்த வியாபாரிகள் பலர் மஞ்சளை அதிகமாக கொள்முதல் செய்து வந்தனர்.
கொரோனா பாதிப்பு காரணமாக சில நாட்கள் மஞ்சள் ஏலம் நடக்காமல் இருந்து வந்தது. கிருமி நாசினியாக மஞ்சள் இருப்பதால், கொரோனா பாதிப்புக்கு பிறகு மஞ்சளின் விற்பனை சூடுபிடிக்கும் என்றும், அதனால் விலையில் ஏற்றம் ஏற்படும் என்றும் விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் எதிர்பாராதவிதமாக கடந்த சில நாட்களாக மஞ்சளின் விலை கடுமையான வீழ்ச்சி அடைந்து வருவது விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த ஏலத்துக்கு 489 மூட்டை மஞ்சள் கொண்டு வரப்பட்டது. இதில் 395 மூட்டைகள் விற்பனையானது. மேலும், ஒரு குவிண்டால் தனிவிரலி மஞ்சள் ரூ.5 ஆயிரத்து 56 முதல் ரூ.5 ஆயிரத்து 959 வரையும், தனி கிழங்கு மஞ்சள் ரூ.4 ஆயிரத்து 961 முதல் ரூ.5 ஆயிரத்து 966 வரையும் விலைபோனது. மஞ்சளின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்து உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
ஆந்திரா மாநிலத்தில் விவசாயிகளிடம் இருந்து அந்த மாநில அரசு சார்பில் மஞ்சள் ஒரு குவிண்டாலுக்கு ரூ.6 ஆயிரத்து 800 -க்கு கொள்முதல் செய்யப்பட்டது. இந்த மஞ்சள் தற்போது ஏலம் முறையில் அந்த அரசு விற்பனை செய்கிறது. இதில், ஒரு குவிண்டாலுக்கு மார்க்கெட் விலையில் ரூ.4 ஆயிரத்து 500 முதல் ரூ.5 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இந்த மஞ்சளை மற்ற மாநில வியாபாரிகள் வாங்குவதால் ஈரோடு மார்க்கெட்டுக்கு வரும் வியாபாரிகளின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது.
தீபாவளி பண்டிகையின்போது நுகர்வு அதிகரித்தால் மஞ்சளின் விற்பனையும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கிறோம். ஈரோடு மஞ்சளின் விலை குறைந்துவிட்டதாக முழுமையாக கூறமுடியாது. அவசர பண உதவி தேவைப்படும் விவசாயிகள் மட்டும் மஞ்சளை விற்பனைக்கு கொண்டு செல்கிறார்கள். விலை கிடைக்கும் நம்பிக்கையில் மஞ்சளை விவசாயிகள் பாதுகாத்து வருகிறார்கள். இதனால் தரமான மஞ்சள் விற்பனைக்கு வரும்போது விலையும் உயரும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் கூறினர்.