logo
ஈரோடு வ.உ.சி காய்கனி சந்தை மூன்று நாள்களுக்கு பிறகு திறப்பு: மழை நீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி

ஈரோடு வ.உ.சி காய்கனி சந்தை மூன்று நாள்களுக்கு பிறகு திறப்பு: மழை நீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி

10/Oct/2020 06:38:08

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஈரோடு ஆர்.கே.வி. சாலையில் செயல்பட்டு வந்த நேதாஜி தினசரி காய்கனி சந்தை ஈரோடு  பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்டது. பின்னர் ஈரோடு வ. உ .சி .பூங்கா பகுதியில் ரூ. 1 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட தற்காலிக சந்தையில் செயல்பட்டு வருகிறது. இங்கு 2700-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இரவில் மொத்த வியாபாரமும் காலை 12 மணி வரை சில்லறை வியாபாரமும்  நடைபெற்று வருகிறது. 

இங்கு எப்போதும் வியாபாரிகள் பொதுமக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருப்பதால் சந்தை பரபரப்பாக காணப்படும். இந்நிலையில்,மழைநீர் புகுந்து சேரும் சகதியுமாக மாறி விடுவதால் பொதுமக்கள் வியாபாரிகள் அவதி அடைந்தனர் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் தார் சாலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

 இதைத்தொடர்ந்து ரூ 25 லட்சம் மதிப்பில் தார்ச் சாலைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த வாரம் இதற்காக ஜல்லி கொட்டப்பட்டது. இந்நிலையில், கடந்த புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை 3 நாட்களுக்கு வ.உ.சி காய்கறி மார்க்கெட்டுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு தார்சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது.

தார்ச்சாலை அமைக்கும் பணி முடிவடைந்தது.

 இந்நிலையில், நேற்று இரவு ஈரோடு மாநகராட்சி பாதையில் சுமார் ஒரு மணி  நேரமாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் வஉசி காய்கறி மார்க்கெட் பகுதியில்  சாலை அமைத்த பகுதியைத் தவிர  மற்ற தாழ்வான பகுதியில் மீண்டும் மழை நீர் சூழ்ந்தது.  

இன்று வழக்கம் போல் மார்க்கெட் செயல்பட தொடங்கினாலும் மழை தண்ணீர் சூழ்ந்து நின்றதால் வியாபாரிகள் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.  நடுப்பகுதியில் மட்டும் தார் சாலை அமைக்கப்பட்டு இருந்ததால் கடை இருக்கும் தாழ்வான பகுதிகளில்  மழைநீர் தேங்கியுள்ளது. எனவே கரையோரம் உள்ள பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீர் வெளியேறும் வகையில்  கால்வாய் அமைக்க  சம்பந்தப்ப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென  பொதுமக்களும் வியாபாரிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Top