logo
பொதுப் பிரிவினருக்கான பி.இ.  படிப்பு கலந்தாய்வு இன்று தொடக்கம்

பொதுப் பிரிவினருக்கான பி.இ. படிப்பு கலந்தாய்வு இன்று தொடக்கம்

08/Oct/2020 11:29:28

சென்னை: பொறியியல் மாணவர் சேர்க்கையில் சிறப்பு ஒதுக்கீட்டு கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், இன்று (அக். 8) முதல் பொதுப்பிரிவு மற்றும் தொழிற்கல்வி பிரிவுக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ளது..

பிளஸ் 2 முடித்த மாணவர்கள் அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ. - பி.டெக். படிப்பில் சேர இணையவழி கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் 461 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு 1,63,154 இடங்கள் உள்ளன. இதற்கான சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்க 1.6 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், அதில் 1.12 லட்சம் பேர் மட்டுமே தகுதி பெற்றனர்.

இதைத் தொடர்ந்து நிகழாண்டுக்கான கலந்தாய்வு கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி தொடங்கியது. முதலில், சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. இதில், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 457 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. இவர்களுக்கான ஒதுக்கீடு கடந்த செவ்வாய்க்கிழமை முடிவடைந்தது.

இதைத் தொடர்ந்து பொதுப்பிரிவு மற்றும் தொழிற்கல்வி மாணவர்களுக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை தொடங்கி அக்.28-ஆம் தேதி வரை 4 கட்டங்களாக இணையவழியில் நடைபெறுகிறது. ஒவ்வொரு சுற்றிலும் மாணவர்கள் தங்களின் தரவரிசை அடிப்படையில் பங்கேற்கவுள்ளனர். முதல்சுற்றில் (தொழிற்பிரிவினர் உள்பட) இடம்பெற்றவர்கள் வியாழக்கிழமை முதல் அக்.11-ஆம் தேதி வரை முன்பதிவு கட்டணத்தை செலுத்த வேண்டும். அதன்பின் அக்.12, 13-ஆம் தேதியில் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

அதைத்தொடர்ந்து தற்காலிகமாக ஒதுக்கப்பட்ட கல்லூரிகளின் பட்டியல் அக்.14-இல் வெளியிடப்படும். அதற்கு ஒப்புதல் அளிக்க 2 நாள்கள் காலஅவகாசம் வழங்கப்படும். மாணவர்கள் ஒப்புதல் தந்ததும் இறுதி ஒதுக்கீட்டு ஆணை அக்.16-இல் தேதி வழங்கப்படும். தொடா்ந்து, இரண்டாம் கட்ட கலந்தாய்வு அக்.12 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறும். அதேபோன்று 3-ஆம் சுற்று அக்.16 முதல் 24-ஆம் தேதி வரையும், 4-ஆம் சுற்று அக்.20 முதல் 28-ஆம் தேதி வரையும் நடத்தப்படும். கூடுதல் விவரங்களை மாணவர்கள்  இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் அதிகாரிகள் தெரிவித்தனர். 


Top