logo
தடப்பள்ளி பாசன வாய்க்காலில் கழிவுகளை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்

தடப்பள்ளி பாசன வாய்க்காலில் கழிவுகளை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்

07/Oct/2020 11:09:21

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ச.கணபதிபாளையம் பகுதியில் செல்லும்  தடப்பள்ளி பாசன வாய்க்காலில் சுகாதாரசீர் கேடு, துர்நாற்றம் வீசும் வகையில்  குப்பைக்கழிவுகளைக் கொட்டும் நபர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாய சங்கம் வலியுறுத்தியுள்ளது.

ஈரோடுமாவட்டம், கோபிகோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி  தடுப்பணையிருந்து தடப்பள்ளி பாசன வாய்க்காலிற்கு கடந்த மாதம் முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டு தற்போது சாகுபடி பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.

இந்நிலையில், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ச.கணபதிபாளையம் பகுதியில் செல்லும் தடப்பள்ளி வாய்க்காலில் கணபதிபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தடப்பள்ளி பாசன வாய்க்காலில் நாள்தோறும் குப்பை கழிவுகள் மருத்துவக்கழிகள் மற்றும் காய்கறி கழிவுகளை அதிகளவுகொட்டிவருவதாகவும் ச.கணபதிபாளையம் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை சவண்டப்பூர் ஊராட்சி நிர்வாகமும் தடப்பள்ளி வாய்க்காலை குப்பை மேடாக பயன்படுத்துவதாகவும் விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 

மேலும், ச.கணபதிபாளையம் கிராமத்தின் குடியிருப்பு பகுதி சாக்கடை கழிவுகள் நேரடியாக தடப்பள்ளி வாய்க்காலில் கலப்பதால் பாசனத்திற்கு செல்லும் தண்ணீர் துர்நாற்றத்துடன் செல்வதாகவும் குப்பைக்கழிவுகளினால் சுகாதார சீர் கேடு ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் குற்றச்சாட்டுத் தெரிவித்தனர்.

தற்போது நெல் நடவுப்பணிகள் முடிவுற்ற நிலையில், இந்த குப்பைக் கழிவுகள் வயல்வெளிகளில் தேங்கியுள்ளதால், நெல் வயல்களுக்கு விவசாயக்கூலி தொழிலாளர்கள் பணிக்கு வர மறுப்பதாகவும் அதையும் மீறி வேலைக்கு வரும் விவசாயக்கூலி தொழிலாளர்களுக்கு அரிப்பு, தேமல், மூச்சுத்திணறல் போன்ற வியாதிகளால் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தடப்பள்ளி பாசன விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். 

சுகாதாரத்துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தடப்பள்ளி பாசன வாய்க்காலில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கவேண்டும் என்றும் சாக்கடை கழிவுநீரை மாற்று வழியில் அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்றும் தடப்பள்ளி பாசன விவசாயிகள் மற்றும் விவசாய கூலித்தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

                                                                               

        


Top