logo
ஊராட்சித்தலைவர்களுக்கு கருத்துப்பட்டறை: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

ஊராட்சித்தலைவர்களுக்கு கருத்துப்பட்டறை: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

04/Sep/2021 11:32:44

புதுக்கோட்டை, செப்: புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மாவட்ட இயக்க மேலாண்மைஅலகு சார்பில் கிராமின் கௌசல்ய யோஜனா திட்டத்தின் கீழ் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான கருத்துப் பட்டறையினை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  தொடங்கி வைத்தார்.

இதில் ஆட்சியர் கவிதா ராமு  பேசியதாகவது: தீன் தயாள் உபாத்யாய கிராமின் கௌசல்ய யோஜனா திட்டத்தின் கீழ் பயிற்சி பெற கிராம ஊராட்சிப் பகுதிகளில் வசிப்பவர்கள், 18 முதல் 35 வயதுள்ளவர்கள், வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் பிரிவைச் சார்ந்தவர்கள் பயன் பெறலாம். இதில் 3 மாதங்கள் முதல் அதிகபட்சம் ஓராண்டு வரை பணியிடைப் பயிற்சி, மென் பொருள் திறன் பயிற்சி, அடிப்படை ஆங்கில அறிவு, கணினிப்பயன்பாடு, இன்டர்நெட் உபயோகம், ஆளுமைத் திறன் மேம்பாடு ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படும்.

பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்யும் இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் குறைந்தபட்சம் ரூ.6,000 மாத வருமானத்துடன் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படுவதுடன் குறைந்தது ஓராண்டு காலத்திற்கு பின் தொடர்ந்து   மேற்கொள்ளப்படும். தீன் தயாள் உபாத்யாய கிராமின் கௌசல்ய யோஜனா திட்டத்தின் கீழ், புதுக்கோட்டை மாவட்ட இளைஞர்கள் பயன்பெற மாவட்டத்தில் செயல்பட்டு வரும், மாவட்ட இயக்க மேலாண்ம் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை பெறலாம்.


திட்டத்தினை, கிராமப் பகுதிகளில் சிறப்பாக செயல்படுத்தும் வகையில்உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் இத்திட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதிக எண்ணிக்கையில் இளைஞர்களை பயன்பெறச் செய்ய வேண்டும்.  புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு 100 சதவீதம் கோவிட்தடுப்பூசி செலுத்தும் வகையில், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் செயல்பட வேண்டும். முதலில் உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் 100% கண்டிப்பாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தினார் .

இதனிடையே, ஊராட்சி தலைவர்கள் சிலர் தங்கள் ஊராட்சிகளுக்கு 100 நாள் வேலை திட்டம் முறையாக வழங்கப்படுவதில்லை என்றும்  அதேபோல் அரசின் வீடு கட்டும் திட்டத்தில் முறையாக பயனாளிகளை தேர்வு செய்ய சிலர் எங்களுக்கு தடையாக உள்ளனர் என்றும் ஆட்சியரிடம் புகார் அளித்தனர். இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்தார்.  முன்னதாக,  அலுவலக வளாகத்தில் மகளிர் சுயஉதவிக்குழு சார்பில் அமைக்கப்பட்டிருந்த உற்பத்தி பொருட்கள் விற்பனை மற்றும் கண்காட்சியை ஆட்சியர் பார்வையிட்டார்.


 


Top