logo
கல்லூரிகள் நாளை மறுநாள் (புதன்கிழமை) முதல் திறக்கப்படுவதால் வகுப்பறைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது

கல்லூரிகள் நாளை மறுநாள் (புதன்கிழமை) முதல் திறக்கப்படுவதால் வகுப்பறைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது

30/Aug/2021 01:06:51

புதுக்கோட்டை, ஆக:  கொரோனா பரவல் காரணமாக தடுப்பு நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளன. இந்த நிலையில் வருகிற 1-ஆம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும் எனவும், பள்ளிகளில் 9 முதல் பிளஸ்-2 வகுப்புகள் வரை திறக்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்தது.  கல்லூரிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்தவும் வழிகாட்டு முறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளை திறக்க தேவையான நடவடிக்கைகளை கல்லூரி நிர்வாகத்தினர் மேற்கொண்டுள்ளனர். புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் வகுப்பறைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் கிருமி நாசினி தெளிப்பு உள்பட சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கல்லூரிக்கு வரும் மாணவ-மாணவிகள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வகுப்பறையில் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், சுழற்சி முறையில் மாணவ-மாணவிகளுக்கு வகுப்புகள் நடைபெற உள்ளது. தடுப்பூசி அவசியம் என்பதால் 18 வயதிற்கு மேற்பட்ட மாணவ-மாணவிகள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மையங்களில் குவிந்து வருகின்றனர்.  

புதுக்கோட்டையில் நகர்மன்றத்தில் நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாமில் கடந்த ஓரிரு நாட்களாக கல்லூரி மாணவ-மாணவிகள், அவர்களது பெற்றோர் வருகை அதிகமாக இருந்தது. நேற்றும் மாணவ-மாணவிகள் அதிக அளவில் வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் 5 லட்சத்து 33 ஆயிரத்து 108 பேருக்கும், 2-வது டோஸ் 93 ஆயிரத்து 127 பேருக்கும் போடப்பட்டுள்ளது. தினமும் சராசரியாக 10 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

பள்ளிகள் திறக்கப்பட உள்ளநிலையில் மாணவர்களின் பெற்றோர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள அரசு அறிவுறுத்தி உள்ளதால், அவர்களும் தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்த ஆர்வமாக முன் வந்துள்ளனர். இதனால் கொரோனா தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.


Top