logo
தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு உயர்தொழில் நுட்ப கணினி ஆய்வக அடிப்படை  பயிற்சியைஒருங்கிணைத்து நடத்தவேண்டும்:முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி அறிவுறுத்தல்.

தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு உயர்தொழில் நுட்ப கணினி ஆய்வக அடிப்படை பயிற்சியைஒருங்கிணைத்து நடத்தவேண்டும்:முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி அறிவுறுத்தல்.

27/Aug/2021 11:00:26

புதுக்கோட்டை, ஆக:   தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு உயர்தொழில் நுட்ப கணினி ஆய்வக அடிப்படை  பயிற்சியை வட்டார கல்வி அலுவலர்கள் வட்டார வளமைய பயிற்றுனர்கள் ஒருங்கிணைத்து நடத்தவேண்டும் என்றார்  புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி.


புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள தேர்வுக்கூட அரங்கில் மாவட்டக்கல்வி அலுவலர்கள், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவித்திட்ட அலுவலர் (தொடக்கநிலை), ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர்(இடைநிலை), பள்ளித்துணை ஆய்வாளர்கள், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள்(பொ) ஆகியோருக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி தலைமை வகித்து பேசியதாவது:   வருகிற 1  -ம் தேதி முதல் 9, 10, 11, 12 -ம் வகுப்புகளுக்கு அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி  பள்ளிகள்  இயங்க உள்ளன. அதனைத்தொடர்ந்து  சூழ்நிலையைப்பொறுத்து அரசின் உத்தரவுப்படி  அடுத்த கட்டமாக தொடக்க நிலை வகுப்புகளுக்கும் பள்ளிகள் செயல்பட உள்ளதாக தெரிகிறது.

மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு சரியான நேரத்திற்கு வருவதை வட்டாரக்கல்வி அலுவலர்கள் உறுதி செய்யவேண்டும். இனி ஆசிரியர்களின் கலந்தாய்வு, பள்ளிசார்ந்த, மாணவர் சார்ந்த அனைத்து விவரங்களும் எமிஸ் வாயிலாகவே  நடைபெற உள்ளதால் ஆசிரியர்கள் விவரம், மாணவர்களுக்கான நலத்திட்டங்கள், சத்துணவு, பள்ளிக்கான அடிப்படை வசதி உள்ளிட்ட அனைத்தும் சரியான முறையில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்திருக்கவேண்டும். வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர்கள் தங்களது நகர்வு பதிவேட்டில் குறிப்பிட்டவாறு சென்று பணி செய்கிறார்களா என்பதை வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள்(பொ) உறுதி செய்ய வேண்டும்.  


ஆசிரியர்களின்  பணிப்பதிவேடு சார்ந்த நிலுவையினை  வட்டாரக்கல்வி அலுவலர்கள் உடனுக்குடன் முடித்திட வேண்டும். அரசினால் வழங்கப்பட்டுள்ள பாடப்புத்தகம் உள்ளிட்ட விலையில்லா நலத்திட்டங்கள் மாணவர்களுக்கு உரிய முறையில் சென்றடைந்துள்ளதா என்பதை வட்டாரக்கல்வி அலுவலர்கள் உறுதி செய்யவேண்டும்.

தொடக்கக்கல்வியில்  இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத ஆசிரியர்களிடம் தடுப்பூசியின் முக்கியத்துவத்தை  வட்டாரக்கல்வி அலுவலர்கள் எடுத்துக்கூறி தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏற்பாடு செய்யவேண்டும். ஏற்கெனவே முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கும், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும், நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் சில பட்டதாரி ஆசிரியர்களுக்கும் உயர்தொழில் நுட்ப கணினி ஆய்வக அடிப்படை பயிற்சி நடைபெற்று முடிந்துள்ளது.

வட்டாரக்கல்வி அலுவலர்களும், வட்டார வளமைய மேற்பார்வையாளர்களும்(பொ) ரயில்  தண்டவாளம் போல இணைந்து செயல்பட்டு வருகிற 6ந்தேதி முதல் நடுநிலை, தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு மூன்றாம் கட்டமாக நடைபெறும் உயர்தொழில்நுட்ப  கணினி ஆய்வக அடிப்படை பயிற்சியினை சரியான திட்டமிடலுடன் சிறப்பான முறையில் ஒருங்கிணைத்து நடத்தவேண்டும்.

5 நாட்கள் நடைபெறும் இப்பயிற்சியானது காலை 9.00மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறுவதையும், பயிற்சியில் கலந்துகொள்ளும் ஆசிரியர்கள் தங்களது வருகையினை  காலை 9.00 மணி முதல் 9.30 மணிக்குள்ளாக இணைய தளம் வாயிலாக எமிஸில் பதிவு செய்வதை உறுதி செய்யவேண்டும்.9, 10, 11, 12 -ம் வகுப்புகளைத்தொடர்ந்து மற்ற வகுப்புகளுக்கும் எந்நேரமும் பள்ளித்திறப்பு குறித்து அரசு உத்தரவிடலாம்.

எனவே இதனை கருத்தில் கொண்டு அரசின் அனைத்து நிலையான வழிகாட்டு் நெறிமுறைகளையும் பின்பற்றி பள்ளிகள் செயல்படுவதற்கான தூய்மைப்பணி உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் சிறப்பாக செய்துள்ளதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலர் கே.எஸ்.ராஜேந்திரன்,அறந்தாங்கி மாவட்டக்கல்வி அலுவலர் கு.திராவிடச்செல்வம், இலுப்பூர் மாவட்டக்கல்வி அலுவலர் ப.சண்முகநாதன், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் (தொடக்க நிலை) ரவிச்சந்திரன்,ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர்(இடைநிலை) பழனிவேலு, முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்,  பள்ளித்துணை ஆய்வாளர்கள்,வட்டாரக்கல்வி அலுவலர்கள், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள்(பொ) மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Top