logo
புதுக்கோட்டை மாவட்டத்தில் செப்படம்பர் 1 -ஆம் தேதி முதல் பள்ளிகள் 9, 10, 11, 12- ஆம் வகுப்புகள் தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் செப்படம்பர் 1 -ஆம் தேதி முதல் பள்ளிகள் 9, 10, 11, 12- ஆம் வகுப்புகள் தொடக்கம்

25/Aug/2021 07:21:38

புதுக்கோட்டை, ஆக: புதுக்கோட்டை மாவட்டத்தில் செப்படம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் 9, 10, 11, 12- ஆம் வகுப்புகள் தொடங்கப்படுவதை முன்னிட்டு  கொரோனா தடுப்பு  தொடர்பாக  மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்  மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (25.8.2021)நடைபெற்ற கூட்டத்தில்  ஆட்சியர் கவிதாராமு பேசியதாவது: தமிழக அரசு மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும், சுயநிதிப் பள்ளிகள் வருகின்ற செப்டம்பர் 1 -ஆம் தேதி முதல் 9, 10, 11, 12 -ஆம் வகுப்புகள் செயல்பட உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் பள்ளிக்கல்வித் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி கொரோனா  தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்வது குறித்து இந்த ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நடைபெறுகிறது.

 இக்கூட்டத்தில், பள்ளிகள் திறக்கப்படும் பொழுது மாணவர்களை கோவிட் தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் தவறாது கோவிட் தடுப்பூசி செலுத்தப்படுவதை உறுதி செய்யய வேண்டும். கோவிட் தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில் சிறப்பு தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யவேண்டும்.  மேலும் பள்ளிக்குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்தவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பள்ளியில் வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பும் மற்றும் வகுப்புகள் முடிவுற்ற பின்பும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்களது பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு 100 நாள் வேலைத் திட்ட பணியாளர்கள் மூலம் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பள்ளிகளில் குடிநீர் வசதி, கழிவறை வசதி, மின்சார வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் முறையாக உள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

 மேலும் அரசு அறிவுறுத்தியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பள்ளிகளில் 50 சதவீத மாணவர்களை அனுமதிக்கவும், அனைவரும் தவறாமல் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்றவற்றை மேற்கொள்வதுடன் பள்ளி வளாகத்தில் மாணவர்கள் கைகழுவும் வகையில் சோப்புகள் மற்றும் தண்ணீர் தொட்டிகளை வைக்கவும், பள்ளிக்கு வருகை தரும் அனைத்து மாணவ, மாணவிகளையும் வெப்பமாணி கருவியின் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து அதன்பிறகே பள்ளிகளுக்குள் அனுமதிக்க வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்படும் பொழுது அரசின் கோவிட் தடுப்பு வழிமுறைகளை தவறாது பின்பற்றி கோவிட் தொற்றிலிருந்து பள்ளி மாணவர்களை பாதுகாக்கும் வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும்  மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது  என்றார்  ஆட்சியர் கவிதா ராமு.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, மாவட்ட கல்வி அலுவலர்கள் கே.எஸ்.ராஜேந்திரன் (புதுக்கோட்டை), கே.திராவிடச் செல்வம் (அறந்தாங்கி), ப.சண்முகநாதன் (இலுப்பூர்), வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 


Top