logo
ஈரோடு மாவட்டத்தில் 2 -ஆவது நாளாக பரவலாக பெய்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் 2 -ஆவது நாளாக பரவலாக பெய்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

24/Aug/2021 09:22:36

ஈரோடு, ஆக: வளிமண்டலத்தின் மேல் அடுக்கு சுழற்சி காரணமாக ஈரோடு மாவட்டத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி சனிக்கிழமை ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக ஈரோடு மாநகர் பகுதியில் விடிய விடிய மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

பல்வேறு இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளித்தது. ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள ரெயில்வே பணிமனை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. இதைப்போல் மொடக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. 

இந்நிலையில் மாவட்டத்தில்  இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் பரவலாக மழை பெய்துள்ளது. பவானியில் அதிகபட்சமாக  33.2 மி.மீ மழை பதிவாகி இருந்தது. ஈரோடு, கோபி, சென்னிமலை, பெருந்துறையில்,  அம்மாபேட்டை, தாளவாடி, பவானிசாகர் போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று 2-வது நாளாக இரவும் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் ஈரோடு மாவட்டத்தில் நாளை பலத்த மழை பெய்யும் என அறிவித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை மில்லி மீட்டரில் வருமாறு:-

பவானி - 33.2, ஈரோடு - 12, கோபி - 6, சென்னிமலை - 5, பெருந்துறை - 4, வரட்டுப்பள்ளம் - 3.4, கவுந்தப்பாடி - 3.2, அம்மாபேட்டை - 3.2, தாளவாடி - 2.4, பவானிசாகர் - 2.2.

Top