logo
ரூபாய்நோட்டுகளில்   மகாத்மா காந்தியின் படத்தை மாற்றும் யோசனை ஏதும் இல்லை: மத்திய அரசு விளக்கம்

ரூபாய்நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படத்தை மாற்றும் யோசனை ஏதும் இல்லை: மத்திய அரசு விளக்கம்

11/Aug/2021 09:54:08

நமது நாட்டில்  ரூபாய் நோட்டுகளில்   தேசப்பிதா மகாத்மா காந்தியின் படம் இடம்பெற்றுள்ளது. பிற எந்த தலைவர்களின் படமும் இடம் பெறவில்லை. இந்நிலையில், மகாத்மா காந்தியின் படத்தை மாற்றவோ, பிற தலைவர்களின் படத்தையும் ரூபாய் நோட்டில் வெளியிடவோ அரசிடம் திட்டம் எதுவும் வைத்துள்ளதா என மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த கேள்விக்கு மாநிலங்களவையில் நேற்று பதிலளித்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், எந்த மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில்விட வேண்டும் என்பது குறித்து ரிசர்வ் வங்கியுடன் கலந்தாலோசித்து மத்திய அரசு முடிவெடுத்து வருகிறது.

அதேபோல, கள்ள நோட்டுகள் தயாரிக்க முடியாத அளவுக்கு ரூபாய் நோட்டுகளைத் தனித்துவத்துடன் வடிவமைப்பது குறித்தும் ரிசர்வ் வங்கியுடன் ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அம்பேத்கரின் 125-வது பிறந்த தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, அவரது உருவப்படம் பொறித்த 10 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி கடந்த ஆண்டு வெளியிட்டுள்ளார்.

ஆனால், அவரது படத்துடன் ரூபாய் நோட்டு வெளியிடும் திட்டமில்லை. 10 ரூபாய் நாணயத்துக்கு தேவை அதிகம் உள்ளது. இனி புதிதாக அதிக அளவில் அம்பேத்கர் படம் பொறித்த நாணயங்கள் வெளியிடப்படும்.

மேலும், காங்கிரஸ் தலைமையிலான கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை மாற்றுவது அல்லது வேறு தலைவர்களின் படங்களைச் சேர்ப்பது குறித்து உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது.

காந்தி படத்தை மாற்ற வேண்டாம் என்றும் வேறு தலைவர்களின் படத்தை சேர்க்க வேண்டாம் என்று அக்குழு பரிந்துரைத்தது. அதன்படியே, ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை மாற்ற வேண்டாம் என்று மத்திய அரசு முடிவெடுத்துள்ளது என்றார்.

இதேபோல், பிளாஸ்டிக் கரன்ஸி வெளியிடப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, சோதனை முறையில் பிளாஸ்டிக் கரன்ஸிகளை அச்சிடுவதற்கான பொருட்களை வாங்குவதற்காக ஒப்பந்தப்புள்ளி கோர ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். 


Top