logo
ஈரோட்டில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்: 300 வீடுகளுக்கு ஒரு அலுவலர் நியமித்து கண்காணிப்பு

ஈரோட்டில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்: 300 வீடுகளுக்கு ஒரு அலுவலர் நியமித்து கண்காணிப்பு

04/Oct/2020 08:18:01

கொரோனா தாக்கம் குறைவதற்குள் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதால் மாநகர பகுதிகளில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள சுகாதார பிரிவு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மாநகர பகுதிகளில் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு கொரோனா அறிகுறிகள் உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் குறையாமல் இருந்து வருகின்றது. இதனிடையே கொரோனாவை தொடர்ந்து டெங்கு காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ளதால் மாநகர சுகாதாரப்பிரிவு உஷார்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது, மாநகர பகுதிகளில் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு தினமும் சராசரியாக 1000 பேர் பரிசோதிக்கப்பட்டு வருகின்றனர். காய்ச்சல், சளி, இருமல் ,உடல் வலி என கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் அவர்களுக்கு மாநகராட்சி மருத்துவமனை களில் உள்ள கொரோனா பரிசோதனை மையங்களுக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாகவும், பருவநிலை மாற்றம் காரணமாக டெங்கு பரவ வாய்ப்பு உள்ளதால் மாநகர பகுதிகளில் மழைநீர் தேங்காத வகையில் சாக்கடைகள் தூர்வாரப்பட்டு வருகிறது. 

மேலும், மாநகர சுகாதாரத்துறை பிரிவு ஊழியர்கள் வீடு வீடாக சென்று டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புடன் டெங்கு பாதிப்பும் சேர்ந்தால் நிலைமை மோசமாகி விடும் என்பதால் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 300 வீடுகளுக்கு ஒருவர் வீதம் சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.இது வரை டெங்கு பாதிப்பு எதுவும் உறுதிபடுத்தப்படவில்லை என்று ஆணையர் இளங்கோவன் தெரிவித்தார். 


Top