logo
கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் மொய் விருந்து நடத்த தடை: ஆட்சியர் அறிவிப்பு

கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் மொய் விருந்து நடத்த தடை: ஆட்சியர் அறிவிப்பு

05/Aug/2021 04:17:42

புதுக்கோட்டை, ஆக: கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு  புதுக்கோட்டை மாவட்டத்தில் மொய் விருந்து நடத்த தடை விதிக்கப்படுகிறது.

இது தொடர்பாக,  மாவட்ட ஆட்சியர் கவிதாராமு வெளியிட்ட தகவல்:புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றினை பரவாமல் கட்டுப்படுத்திடவும் மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகளை போர்க்கால அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் அரசாணையின்படி அனைத்து சமூக, அரசியல் கூட்டங்கள் நடத்தவும், பொழுதுபோக்கு, விளையாட்டு மற்றும் கலாசார நிகழ்வுகள் நடத்திட தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அரசின் அறிவுரைகளின்படி, திருமண விழாக்களில் 50 நபர்களுக்கு மிகாமலும், இறப்பு தொடர்பான ஈமச்சடங்கு நிகழ்வுகளில் 20 நபர்களுக்கு மிகாமலும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்திட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவற்றைத் தவிர வேறு விழாக்கள், நிகழ்வுகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

 எனினும், புதுக்கோட்டை மாவட்டத்தில் மொய் விருந்து விழா நடைபெறுவது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பெற்றுள்ளது. அரசாணையில் அனுமதிக்கப்பட்ட விழாக்கள், நிகழ்வுகளைத் தவிர இதர விழாக்கள் நடத்தப்பட்டாலும், அரசாணையில் தெரிவித்துள்ள வழிகாட்டி நெறிமுறைகளுக்கு மாறாக திருமண விழாக்கள், இறப்பு தொடர்பான ஈமச்சடங்குகள் நடத்தப்பட்டால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவாமல் கட்டுப்படுத்திடும் பொருட்டு பொது  மக்கள்; முககவசம் அணியவும், மக்கள் சமூக  இடைவெளியினை  முறையாகக் கடைபிடிக்கவும்,  கைகளை அடிக்கடி கழுவிடவும், அவசியமின்றி வெளியூர்  பயணங்களை தவிர்க்கவும்  அறிவுறுத்தப்படுகிறது. 

கொரோனா நோய்த்தொற்றினை கட்டுப்படுத்திடும் பொருட்டு அரசு வழங்கியுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தனிநபர; மற்றும் பொதுநலனுக்காக அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.

Top