05/Aug/2021 09:50:04
குளச்சல், ஆக: கன்னியாகுமரி – சென்னை கிழக்கு கடற்கரை பொருளாதார மண்டலம் அமைக்கும் வழித்தடத்தில் தொழிலாளர்களின் போக்குவரத்து வசதிக்காக கூடுதல் ரயில்கள் இயக்க, கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென குளச்சல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் அனுப்பியுள்ள கோரிக்கை கடித விவரம்: கன்னியாகுமரியிலிருந்து மதுரை,சென்னை, விசாகப்பட்டிணம் வழியாக கொல்கொத்தா வரை கிழக்கு கடற்கரை பொருளாதார மண்டலம் ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதிஉதவியுடன் அமைக்கப்படுகின்றது. இந்த திட்டத்தில் இரண்டாம் கட்டமாக கன்னியாகுமரி – சென்னை பொருளாதார மண்டலம் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகின்றது. இதற்காக சாலைகள் விரிவாக்கம் செய்தல் , மின்சாரதுறை வளர்ச்சி, குடிநீர் வசதி ஏற்படுத்துதல் என பல்வேறு துறை சார்ந்த அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இந்த பொருளாதார மண்டலம் அமைக்க பல்வேறு கட்டுமான பணிகளுக்காக அதிக அளவில் புலம்பெயர் தொழிலாளர்கள் தேவைபடுகின்றது. இது மட்டுமில்லாமல் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் இங்கு அமைக்கப்படும் தொழிற்சாலைகளில் பணிபுரிய அதிக அளவு தொழிலாளர்கள் தேவைபடுவார்கள். தற்போது மேற்குவங்காளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களி லிருந்து அதிக அளவில் தொழிலாளர்கள் இந்த பணிகளுக்காக இங்கு வருகைதந்து கட்டுமான பணிகளை செய்து வருகின்றனர்.
இவ்வாறு தமிழகத்துக்கு வரும் தொழிலாளர்களுக்கு போதிய நேரடி ரயில் வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது கன்னியாகுமரியிலிருந்து மதுரை,திருச்சி,சென்னை வழியாக ஹவுரா(கொல்கொத்தா)வுக்கு செல்ல வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே ரயில் இயக்கப்படுகிறது. இந்த தடத்தில் போதிய ரயில் வசதி இல்லாமல் மிகவும் தொழிலாளர்கள் சிரமத்துக்குள்ளாகின்றார்கள்.
ஆகவே ரயில்வேதுறை அதிகாரிகளுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜயவசந்த், ரயில்வேதுறை அமைச்சரிடம் வலியுறுத்த வேண்டுகிறேன். சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் எனது கோரிக்கை மனுவை ரயில்வேதுறைக்கு அனுப்பியுள்ளதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.