logo
ஈரோடு மாநகர் பகுதியில் வீடு வீடாக சென்று சளி காய்ச்சல் பரிசோதனை செய்யும் பணிக்கு 300 அலுவலர்கள் நியமனம்

ஈரோடு மாநகர் பகுதியில் வீடு வீடாக சென்று சளி காய்ச்சல் பரிசோதனை செய்யும் பணிக்கு 300 அலுவலர்கள் நியமனம்

03/Aug/2021 01:03:19

ஈரோடு, ஆக: ஈரோடு மாநகர் பகுதியில் மீண்டும் வீடு வீடாக சென்று சளி காய்ச்சல் பரிசோதனை செய்யும் பணிக்கு 300 அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக  மாநகராட்சி ஆணையர் மா. இளங்கோவன் தகவல் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 2-ஆம் அலை வேகம் எடுத்தது. தொற்று வயது பேதமின்றி அனைவரையும் தாக்கியது. ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.இரண்டாவது அலையில் உயிரிழப்பும் அதிகமாக இருந்தது. பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மாநகராட்சி சுகாதாரத் துறையினர் ஒருங்கிணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டனர். 

குறிப்பாக மாநகர் பகுதியில் பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன் ஒன்றாக மாநகர் பகுதியில் வீடு வீடாகச் சென்று சளி காய்ச்சல் உள்ளதா என்று பரிசோதிக்க மாநகராட்சி அலுவலர்கள் தன்னார்வலர்கள் என ஆயிரத்து 500 பேர் நியமிக்கப்பட்டனர். இவர்கள் வீடு வீடாக சளி காய்ச்சல் உள்ளதா என்று பரிசோதித்து கொரோனா அறிகுறி உள்ளவர்கள் குறித்து விவரம் எடுத்தனர். 

பின்னர் மாநகராட்சி சார்பில் நேரடியாக வீட்டுக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் தொற்று ஏற்பட்டவர்களுக்கு  உடனுக்குடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.இதன் மூலம் ஏராளமானோர் குணமடைந்தனர். இந்த திட்டம் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறையத் தொடங்கியதால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தொற்றுஅதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக கோவை, சென்னையை தொடர்ந்து ஈரோடு மாவட்டத்திலும் தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து பரவல் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் மாநகர் பகுதியில்  கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மா. இளங்கோவன் கூறியதாவது:

தற்போது ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதையடுத்து பரவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோடு மாநகராட்சி பகுதியில் மீண்டும் வீடு வீடாக சென்று சளி காய்ச்சல் உள்ளதா என்று பரிசோதிக்க மாநகராட்சி சார்பில் 300 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள  அனைத்து வீடுகளுக்கும் தினமும் சென்று பரிசோதனை செய்வார்கள். 

கடந்த முறை இந்த பணிக்காக தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். ஆனால் இந்த முறை மாநகராட்சி அலுவலர்கள் மட்டுமே செல்வார்கள். மேலும் மாநகர் பகுதியில் முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணியை தீவிரப்படுத்த உள்ளோம். இதே போன்று பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமூக இடைவெளி முறையாக பின்பற்றப் படுகிறதா என்பது குறித்தும் கண்காணித்து வருகிறோம். 

மேலும் கடைகளில் அவ்வப்போது அதிகாரிகள் சென்று ஆய்வு மேற்கொள்வார்கள். கடை வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக நுழைவு வாயிலில் சனிடைசர், கை கழுவ சோப் வைத்திருக்க வேண்டும். முக கவசம் அணிந்து வரும் வாடிக்கையாளர்களை மட்டுமே கடைக்குள் அனுமதிக்க வேண்டும்.

அதைப்போன்று கடைக்காரர்களும் கண்டிப்பாக முக கவசம் அணிந்து இருக்க வேண்டும். கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். அதிகாரிகள் ஆய்வுக்கு வரும் போது பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம் விதித்து சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்..


Top