logo
ரூ.21,000 ஊதியம் வழங்க  அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் வலியுறுத்தல்

ரூ.21,000 ஊதியம் வழங்க அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் வலியுறுத்தல்

01/Aug/2021 11:00:32

புதுக்கோட்டை, ஆக:  முழுநேர அரசு ஊழியர்களாக்கி அங்கன்வாடி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.21,000, உதவியாளர்களுக்கு ரூ.18,000 வழங்க வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க புதுக்கோட்டை மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க புதுக்கோட்டை மாவட்ட 3-ஆவது மாநாடு கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள்கள்  புதுக்கோட்டையில் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் பி.சந்திரா தலைமை வகித்தார். டி.பத்மா அஞ்சலி தீர்மானம் வாசித்தார். எம்.தனலெட்சுமி, ஆர்.கலைச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தார். வரவேற்புக்குழுத் தலைவர் ஏ.ஸ்ரீதர் வரவேற்புரையாற்றினார்.

மாநாட்டை தொடங்கி வைத்து சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் கோ.பச்சையம்மாள், பொருளாளர் கே.மல்லிகா ஆகியோர் அறிக்கைகளை முன்மொழிந்தனர். மாநாட்டில் மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.சின்னத்துரை (கந்தர்வகோட்டை), டாக்டர் வை.முத்துராஜா (புதுக்கோட்டை) ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

அப்போது, அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் இந்த ஆட்சி அமைவதற்கு பெரிதும் உதவியாக இருந்தனர். நீங்கள் போராட்டம் நடத்தாமலேயே உங்களது கோரிக்கைகளை கனிவுடன் பரிசீரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுப்பார் என அமைச்சர்கள் உறுதியளித்தனர்.

சங்கத்தின் மாநில பொருளாளர் எஸ்.தேவமணி, சிஐடியு மாவட்டத் தலைவர் கே.முகமதலிஜின்னா, பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியன், கட்டுமான தொழிலாளார் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் சி.அன்புமணவாளன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து, மாநில பொதுச் செயலாளர் டி.டெய்சி நிறைவுரையாற்றினார். மாவட்ட தலைவராக கோ.பச்சையம்மாள், செயலாளராக டி.பத்மா, பொருளாளராக எஸ்.கனிமொழி உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இறுதியில் கே.மல்லிகா நன்றி கூறினார்.


அங்கன்வாடி ஊழியர்களை முழுநேர அரசு ஊழியராக்கி குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.21,000, உதவியாளர்களுக்கு ரூ.18,000 வழங்க வேண்டும். முறையான ஓய்வுதியமாக அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.9,000, உதவியாளர்களுக்கு ழூ.5,000 என வழங்க வேண்டும்.  ஓய்வுபெறும்போது ஊழியர்களுக்கு ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் பணிக்கொடை வழங்க வேண்டும்.  

எல்கேஜி வகுப்புகளில் அங்கன்வாடி ஊழியர்களை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். 10 ஆண்டுகள் பணிமுடித்தவர்களை மேற்பார்வையாளர்களாகவும், 5 வருடம் பணிமுத்த உதவியாளர்களை அங்கங்வாடி பணியார்களாகவும் 3 வருடம்பணி முடித்த மினி மைய ஊழியர்களை மெயின் மையத்திலும் பதவி உயர்வு வழங்க வேண்டும்.

20 ஆண்டுகள் பணிமுடித்த அங்கன்வாடி பணியாளர்களுக்கு கிரேடு-2 மேற்பார்வையாளர்கள் பதவிஉயர்வு அளித்து அதற்கான ஊதியமும் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். அங்கன்வாடி திட்டத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Top