logo
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா விழிப்புணர்வு ஒருவார கால  பிரசாரம்: அமைச்சர்கள் தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா விழிப்புணர்வு ஒருவார கால பிரசாரம்: அமைச்சர்கள் தொடக்கம்

01/Aug/2021 03:21:59

புதுக்கோட்டை, ஆகஸ்ட்: புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா விழிப்புணர்வு ஒருவார கால  பிரசாரத்தை  அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் தொக்கி வைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில், கொரோனா விழிப்புணர்வு ஒருவார கால தொடர் பிரச்சாரத்தை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் இன்று (01.08.2021) தொடக்கி  வைத்தனர்.

பின்னர்  அமைச்சர் எஸ்.ரகுபதி கூறியதாவது:தமிழகத்தில் கோவிட் நோய் தொற்றை தடுக்கும் வகையில் முதல்வர் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையின் காரணமாக தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கோவிட் மூன்றாம் அலை ஏற்படாமல் தடுக்கவும், கோவிட் தடுப்பூசி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்  முதல்வர் ஸ்டாலின்  அறிவுறுத்தலுக்கிணங்க, புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா விழிப்புணர்வு ஒருவார கால தொடர் பிரசாரம் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. 

கோவிட் தொற்றில் இருந்து பாதுகாக்க பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும். கோவிட் தொற்று நம்மால் பிறருக்கும், மற்றவர்களால் நமக்கும் பரவுவதைத் தடுக்கும் வகையில் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும்.  கள் வரும்முன் காப்போம் என்ற வகையில் முதல்வர்  கோவிட் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  புதுக்கோட்டை மாவட்டத்தில் 1.8.2021 முதல் 7. 8.2021 வரை ஒருவார காலத்திற்கு கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. 

கோவிட் தொற்றை தடுக்கும் வகையில் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கைக்கழுவுதல் போன்ற கோவிட் தடுப்பு நடவடிக்கைகளை தவறாது பின்பற்ற வேண்டும். பொதுமக்களை பாதுகாப்பதே அரசின் தலையாய பணி என்பதை உணர்ந்து தமிழக அரசு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில்  24 மணி நேரமும் செயல்படும் கோவிட்- 19 கட்டளை மையம் அமைக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் மருத்துவ முகாம்கள், கோவிட் சிகிச்சை மருத்துவமனைகள் மற்றும் காலியாக உள்ள படுக்கைகள் விவரம், ஆம்புலன்ஸ் உதவி போன்ற கோவிட் தொடர்பான தகவல்களுக்கு 04322-222207, 04322-1077 ஆகிய தொலைபேசி எண்களிலோ அல்லது  75388 84840 என்ற அலைபேசி வாட்ஸ்அப் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.  

மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தினை சிறப்பாக மேற்கொண்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார்  அமைச்சர்  எஸ்.ரகுபதி.


பின்னர், அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கூறியதாவது: கோவிட் தொற்றை தடுக்கும் வகையில்  முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்ட போர்க்கால நடவடிக்கையின் காரணமாக கோவிட் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கோவிட் தொற்று மற்றும் கோவிட் தடுப்பூசி குறித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கொரோனா விழிப்புணர்வு ஒருவார கால தொடர் பிரசாரம்  தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.

நிர்வாகத் திறனில்  முதல்வர் சிறந்து விளங்குவதால்  கோவிட் இரண்டாம் அலையை விரைவாக கட்டுப்படுத்தி உள்ளார்கள். இதேபோன்று கோவிட் தடுப்பு குறித்து பொதுமக்களிடையே அதிகளவு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

முதலமைச்சர்  அறிவுறுத்தலுக்கிணங்க புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.93 லட்சம் மதிப்பீட்டில்  ஒருமணி நேரத்திற்கு 200 நோயாளிகளுக்கு தேவையான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் வகையில் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. 

மேலும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் பயன்பெறும் வகையில் செல்போன் டவரும் அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை கழிவுகளை சுத்திகரிக்கும் வகையில் ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. மருத்துவமனை பகுதியில் 5,000 மரக்கன்றுகள் நட்டு குறுங்காடுகள் உருவாக்கி அதனை முறையாக பராமரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டத்தில் போதுமான அளவு கோவிட் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். முதலமைச்சர் அவர்கள் அறிவிப்பின்படி 100 சதவீதம் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்ட, உள்ளாட்சி அமைப்புகளை பாராட்டி நற்சான்றுகள் மற்றும்  பரிசுகள் வழங்கப்பட உள்ளது. எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் 100 சதவீதம் கோவிட் தடுப்பூசி செலுத்தி முன்மாதிரியாக திகழவும், அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றார் அமைச்சர் மெய்யநாதன்.

முன்னதாக, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  கொரோனா விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக்கொண்டு, அதன் பின்னர் கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள், சிற்றேடுகள் மற்றும் விழிப்புணர்வு குறும்படங்கள் ஆகியவற்றை அமைச்சர்கள்  வெளியிட்டனர். மேலும் கொரோனா விழிப்புணர்வு பிரசார வாகனங்களையும் கொடியசைத்து துவக்கி வைத்தனர். 

இந்நிகழ்வில்,புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா, முன்னாள் அரசு வழக்குரைஞர் கே.கே.செல்லப்பாண்டியன் , மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், பொது சுகாதாரத் துணை இயக்குநர் கலைவாணி, க. நைனாமுகமது, எம்.எம். பாலு, கே.இராமகிருஷ்ணன் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

 

                                                   

        


Top