logo
தடுப்பூசி போட்டதால் முக கவசம்  அணியாமல் அலட்சியம்.. ஈரோட்டில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிய கொரோனா தொற்று

தடுப்பூசி போட்டதால் முக கவசம் அணியாமல் அலட்சியம்.. ஈரோட்டில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிய கொரோனா தொற்று

30/Jul/2021 11:50:37

ஈரோடு, ஜூலை:  ஈரோடு மாவட்டத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் முக கவசம்  அணியாமல் அலட்சியமாகச்சுற்றித் திரிவதால் ஈரோட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

 ஈரோடு மாவட்டத்தில் கொரோனா முதல் அலையை விட 2-ஆம் அலை அ  திக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இரண்டாம் அலையில் குழந்தைகள், இளைஞர்கள், வயதான முதியவர்கள் என அனைத்து தரப்பினரையும் வயது பேதமின்றி தாக்கியது. உயிர் இழப்பும் அதிகளவில் இருந்தது. குறிப்பாக வயதான முதியவர்கள் அதிக அளவில் இறந்தனர். போலீசார் ,மருத்துவர்கள், செவிலியர்கள் என முன்கள பணியாளர்களும் பலர் உயிரிழந்தனர். இந்நிலையில் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத் துறையினர், மாநகராட்சியுடன் இணைந்து மேற்கொண்டனர்.

 தினசரி கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. இதன் மூலம் நோய் பாதிப்பு ஏற்பட்டவர்கள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு அவர்களுக்குத் தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டது. 

மேலும் மாவட்டம் முழுவதும் வீடு வீடாக சளி காய்ச்சல் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களில் பெரும்பாலானோர் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு மருத்துவர்கள் அறிவுரைப்படி சிகிச்சை எடுத்துக் கொண்டனர். இதில் நல்ல பலன் கிடைத்து ஒரு வாரத்திற்குள்ளாகவே குணம்  அடைந்தனர்.

இது போன்ற தடுப்பு நடவடிக்கை காரணமாக மாவட்டத்தில் தொற்று பரவல் குறைய தொடங்கியது. கடந்த ஒன்றரை மாதமாக தினசரி பாதிப்பு குறைந்து வந்தது. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக மாவட்டத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு தினசரி பாதிப்பு 132 ஆக இறந்தது. நேற்று முன்தினம் 140 ஆக அதிகரித்தது. இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி 166 ஆக அதாவது கூடுதலாக 26 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனால் மாவட்டத்தில் இதுவரை  தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 93 ஆயிரத்து 369 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 144 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 91 ஆயிரத்து 368 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 633 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாவட்டம் முழுவதும் ஆயிரத்து 368 பேர் தொற்றால்  பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


 மாவட்டத்தில் ஒரே நாளில் 26 பேருக்கு கூடுதலாக தொற்று ஏற்பட்டுள்ளதால் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த மூன்று நாட்களாக மெல்ல மெல்ல தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் தொற்று பரவி வருகிறது. ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று 32 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது தடுப்பூசி போடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்ட ஒரு சிலர் அலட்சியத்துடன் இருக்கின்றனர். குறிப்பாக முக கவசம் அணியாமல் வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


 மாவட்டம் முழுவதும் போலீசார் வருவாய்த்துறையினர் மாநகராட்சி பணியாளர்கள் முக கவசம் அணியாமல்  வருபவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.  பாதிக்கு பாதி மக்கள் முக கவசம் அணிந்து இருந்தாலும் அவற்றை முறையாக அறியாமல் இருக்கின்றனர். மூக்கு வாய் வெளியே தெரியும்படியும் கழுத்துக்கு கீழேயும் முக கவசம் அணிந்து வருகின்றனர். அதிகாரிகளை பார்த்தால் முறையாக முக கவசம் அணிந்து செல்கின்றனர்.

 பின்னர் வழக்கம்போல் முறையாக அணியாமல் செல்கின்றனர். பொது இடங்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக செல்ல தொடங்கியுள்ளனர். இதனால் இங்கு சமூக இடைவெளி கேள்விக்குறி ஆகியுள்ளது. இதுபோன்ற காரணங்களால் ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் கவலையடைந்த சுகாதாரத் துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். மீண்டும் திரும்பி நாசியைத் துளைக்கும் பணி தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. முகக் கவசம் சமூக இடைவெளி கடை பிடிக்காதவர்கள் மீது அபராதம் விதிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


Top