logo
புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக்கோட்டையில்  தொல்லியல் அகழ்வுப் பணி: அமைச்சர் மெய்யநாதன் தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக்கோட்டையில் தொல்லியல் அகழ்வுப் பணி: அமைச்சர் மெய்யநாதன் தொடக்கம்

30/Jul/2021 03:21:40

புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், வேப்பங்குடி ஊராட்சி, பொற்பனைக்கோட்டையில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு முன்னிலையில்  நடைபெற்ற அகழ்வுப் பணியினை சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்(30.07.2021) தொடக்கி  வைத்தார்.

பின்னர் அமைச்சர்  மேலும் கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக்கோட்டை பகுதியில் ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு தொல்லியல் துறை அனுமதியுடன் அகழ்வுப் பணி  தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.


இந்த இடத்தில் தொல்லியல் கழகத்தின் சார்பில் முதற்கட்டமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், இப்பகுதியில் ஒரு கோட்டை இருந்ததாகவும், அதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும்,  பொற்பனைக்கோட்டை பகுதியில் கி.பி  2 -ஆம் நூற்றாண்டில் மக்கள் வாழ்ந்த குறியீடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதனடிப்படையில், தமிழர்களின் தொன்மையான நாகரீகம், இந்த கோட்டைப் பகுதியில் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த அகழ்வுப் பணிக்கு தேவையான அனைத்து உதவிகள் செய்யவும்,  இப்பகுதியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றவும்  உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன். 

இந்நிகழ்வில், வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, தொல்லியல் ஆய்வு கழக இயக்குநர் பேராசிரியர் இனியன், புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர் மணிகண்டன், ஊராட்சிமன்றத் தலைவர் ராஜாங்கம் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.


Top