logo
சிறுவர்களுக்கு செப்டம்பர் முதல் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி செலுத்த வாய்ப்பு: எய்ம்ஸ் இயக்குநர் தகவல்

சிறுவர்களுக்கு செப்டம்பர் முதல் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி செலுத்த வாய்ப்பு: எய்ம்ஸ் இயக்குநர் தகவல்

25/Jul/2021 11:36:01

சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசியின் பரிசோதனை முடிவடைந்து செம்படம்பர் மாதம் முடிவுகள் வெளியாகும் பட்சத்தில்,  கோவாக்சின் தடுப்பூசி செலுத்த வாய்ப்புள்ளதாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரண்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-ஆவது அலை குறைந்து வரும் நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமடைந்துள்ளது. தடுப்பூசி போடும் பணிகள் ஜனவரி 16-ஆம் தேதி முதல் தொடங்கியது. தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகியவற்றில் ஏதாவது ஒன்று செலுத்தப்பட்டு வருகிறது. இரண்டுமே சிறந்த பலன்களைக் கொடுப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியும் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளது. 

நாட்டில் இதுவரை 42 கோடியே 78 லட்சத்து 82 ஆயிரத்து 261 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனாவில் 3-ஆவது  அலையை ஆகஸ்ட் மாத இறுதி எதிர்கொள்ள நேரிடும் என்றும், அனைவரும் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கவனமாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள்  எச்சரித்து வருகின்றனர்.

கொரோனாவிலிருந்து தப்பித்துக்கொள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதே சிறந்த வழியாகும். 3-ஆவது அலையால் அதிக அளவில் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்ற கருத்து நிலவி வருவதால், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியமாகிறது.


ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியை குழந்தைகளுக்கு வழங்கி பரிசோதிக்கும் சோதனை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த ஜூன் 7-ஆம் தேதி தொடங்கியது. இந்த நிறுவனம் 2-ஆவது கட்ட மருத்துவ பரிசோதனையை வெற்றிகரமாக முடித்துள்ள நிலையில், தற்போது 3வது கட்ட பரிசோதனை நடந்து வருகிறது.

இதுகுறித்து ,தில்லி எய்ம்ஸ் இயக்குநர் ரண்தீப் குலேரியா கூறியதாவது: சிறுவர்களுக்காக தயாரிக்கப்பட்டு வரும் கோவாக்சின் தடுப்பூசி 3-ஆவது கட்ட மருத்துவ பரிசோதனை முடிவடைந்து செம்படம்பர் மாதம் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு முடிவுகள் வெளியானால் அந்த மருந்தை குழந்தைகளுக்கு செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். செப்டம்பர் மாதத்திலிருந்து 2 முதல் 17 வயது வரை கொண்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வாய்ப்பு உருவாகும் என்றார் அவர்.


Top