logo
ஈரோட்டில் முக கவசம் அணியாத 225 பேருக்கு அபராதம்

ஈரோட்டில் முக கவசம் அணியாத 225 பேருக்கு அபராதம்

25/Jul/2021 11:04:13

ஈரோடு, ஜூலை: ஈரோடு மாவட்டத்தில்  ஒரே நாளில் முக கவசம் அணியாத 225 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

 ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனாவுக்கு எதிராக முக்கிய தடுப்பு ஆயுதமாக முக கவசம் உள்ளது. எனவே தான் முகக்கவசம் அணிய வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது. 

ஈரோடு மாவட்டத்தில் முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு போலீசார், மாநகராட்சி அலுவலர்கள், சுகாதார பணியாளர்கள் வருவாய்த்துறையினர் ரூ. 200 அபராதம் விதித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபகாலமாக முக கவசம் அணியாமல் வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. 

இதையடுத்து மீண்டும் மாவட்டம் முழுவதும், பொதுமக்கள் கூடும் இடங்கள் வழிபாட்டுத் தலங்கள் போன்ற பகுதிகளில் அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டு, முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

ஒரே நாளில் ஈரோடு மாவட்டம் முழுவதும் 225 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. இதன் மூலம் 45 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டதாக  அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல் சமூக இடைவெளி கடைப்பிடிக்காத 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து, தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. இதன் மூலம் 2500 அபராதம் வசூல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Top