logo
ஈரோட்டில் மேலும் 137 பேருக்கு தொற்று...  கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1858 ஆக குறைந்தது

ஈரோட்டில் மேலும் 137 பேருக்கு தொற்று... கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1858 ஆக குறைந்தது

24/Jul/2021 12:04:31

ஈரோடு, ஜூலை: ஈரோடு மாவட்டத்தில் மேலும் 137 பேருக்கு தொற்று பரவியுள்ளநிலையில்,  கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1858 ஆக குறைந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகம் எடுத்தது. குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் என வயது பேதமின்றி அனைவரையும் கொரோனா தாக்கியது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சுகாதாரத் துறையினர், மாநகராட்சி ஆகியவை இணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டது. உதாரணமாக வீடு வீடாகச் சென்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 

தினமும் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனை, காய்ச்சல் முகம் காரணமாக தொற்று பாதிப்பு உடையவர்கள் கண்டறியப்பட்டு  உடனுக்குடன் அவர்களுக்கு நோயின் தன்மைக்கு ஏற்ப வீடுகளிலும், ஆஸ்பத்திரிகளிலும், சிறப்பு சிகிச்சை மையங்களிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியது.

 கிட்டத்தட்ட 38 நாட்களுக்கு தினசரி பாதிப்பு குறைந்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தினசரி பாதிப்பு திடீரென உயரத் தொடங்கியது. பொது இடங்களில் சமூக இடைவெளி கேள்விக்குறியானதால் திடீரென பாதிப்பு உயர்ந்தது. நேற்று முன்தினம் தினசரி பாதிப்பு 141 ஆக இருந்தது. இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்ட பட்டியலின்படி மாவட்டத்தில் மேலும் 137 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 இதனால் மொத்த பாதித்தவர்கள் எண்ணிக்கை 92 ஆயிரத்து 452 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் அதே நேரம் நோய் பாதிப்பிலிருந்து 89,968 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 626 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 1858  பேர் மட்டுமே தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Top