logo
கொரோனா தாக்கம் காரணமாக  ஈரோடு புத்தகத் திருவிழா ரத்து:மக்கள் சிந்தனை பேரவை அறிவிப்பு

கொரோனா தாக்கம் காரணமாக ஈரோடு புத்தகத் திருவிழா ரத்து:மக்கள் சிந்தனை பேரவை அறிவிப்பு

23/Jul/2021 12:12:45

ஈரோடு, ஜூலை:  கொரோனா தாக்கம் காரணமாக  ஈரோடு புத்தகத் திருவிழா ரத்து  செய்யப்படுவதாக மக்கள் சிந்தனை பேரவை நிறுவனத் தலைவர் த. ஸ்டாலின் குணசேகரன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக, அவர் வெளியிட்ட தகவல்:  மக்கள் சிந்தனை பேரவை சார்பில் ஈரோடு புத்தகத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பான முறையில் நடந்து வந்தது. ஈரோடு வ.உ.சி .மைதானத்தில் பிரம்மாண்ட அரங்குகளுடன் புத்தகத் திருவிழா நடந்து வந்தது. 100-க்கும் மேற்பட்ட அரங்குகளில் பல அரிய வகை புத்தகங்கள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை கடைசி வாரத்தில் தொடங்கி ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் நிறைவடையும். 13 நாட்கள் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள். 

ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு ஒவ்வொரு தலைப்பில் கருத்தரங்கம்,பட்டிமன்றம், சொற்பொழிவு நடைபெறும். இந்த மாலை நேரச் சொற்பொழிவில் சினிமா பிரபலங்கள், இலக்கியவாதிகள், பட்டிமன்ற பேச்சாளர்கள் பங்கேற்பார்கள். இந்நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக கடந்த ஆண்டு ஈரோடு புத்தக திருவிழா ரத்து செய்யப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணமாக ஈரோடு புத்தகத் திருவிழா ரத்து செய்யப்படுகிறது.

தற்போதைய சூழ்நிலையில் மக்களை கூட்டம் கூட்டமாக வரவழைப்பது, கொரோனா பரவலுக்கு வழிவகுத்துவிடும். எனவே இந்த ஆண்டு புத்தகத் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும், வருகிற ஜூலை 30-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெற வேண்டிய நாட்களில் மாலை நேரங்களில் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மட்டும் இணையவழி தளங்களில் நடைபெறும் என ஸ்டாலின் குணசேகரன் தெரிவித்துள்ளார்.

Top