logo
புதுக்கோட்டையில் அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளின்படி பக்ரீத் பண்டிகை யை கொண்டாடிய இஸ்லாமியர்கள்

புதுக்கோட்டையில் அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளின்படி பக்ரீத் பண்டிகை யை கொண்டாடிய இஸ்லாமியர்கள்

21/Jul/2021 03:15:13

புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டையில் அரசு அறிவித்துள்ள கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளின்படி இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடினர்.

தியாகத் திருநாள்  அல்லது ஹஜ் பெருநாள், உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இறைத் தூதர் இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான துல் ஹஜ் மாதம் 10 -ஆம் நாள் பக்ரீத் கொண்டாடப்படுகின்றது.

வசதியுள்ள முஸ்லிம்கள், ஹஜ் செய்வது என்பது, இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஐந்தாவது கடமையாகும். ஹஜ் செய்வது என்பது, புனிதப் பயணமாக மக்கா செல்வதாகும். இப்புனிதப் பயணக் கிரியைகள்/கடமைகளில் கடைசியானது இறைவனுக்காகப் பலியிடுதலாகும்.

இது ஹஜ் மாதம் பத்தாம் நாள் நடைபெறும். இந்தப் பெருநாள் தொழுகை நடைபெற்றபின் ஆரோக்கியமான ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை பலியிட்டுக் கொடுக்கப்படுகிறது. பெரும்பாலும் உலகம் முழுவதும் இந்தப் பண்டிகை, தியாகப் பெருநாள் எனப்படுகிறது.

இஸ்லாமியர்களின் மிக முக்கியமான பண்டிகையாக இருக்கும் பக்ரீத் பண்டிகை ஒவ்வொரு வருடமும் வெகு சிறப்பாக இஸ்லாமியர்கள் பள்ளிவாசல்களில் கூட்டுத் தொழுகை செய்து கொண்டாடி வருவது வழக்கம்.  ஆனால், கடந்த வருடங்களில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழக அரசு கூட்டு தொழுகைக்கு அனுமதி அளிக்காததால், ரம்ஜான்,  பக்ரீத்  பண்டிகைகளை  இஸ்லாமியர்கள் பள்ளிவாசலில் கொண்டாடாமல் வீடுகளிலேயே தொழுகை நடத்தினர்.

தற்போது தமிழகத்தில் வைரஸ் தொற்று குறைந்து வருவதால் இந்த வருடம் பக்ரீத் பண்டிகைக்கு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை ஈடுபடுவதற்கு தமிழக அரசு அனுமதியை வழங்கியிருந்தது. 

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானம் அருகே உள்ள ஈத்-கா பள்ளிவாசலில் நூற்றுக்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் பள்ளிவாசலில் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தும் முகக்கவசம் அணிந்து அரசு அறிவித்த நெறிமுறைகளின்படி தொழுகை நடத்தி பக்ரீத் பண்டிகையை கொண்டாடினர்.

 அதுமட்டுமல்லாமல் பக்ரீத் பண்டிகை முடிந்த உடன் இஸ்லாமியர்கள் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்து தெரிவித்து கொள்வார்கள்.  ஆனால், தற்போது வைரஸ் தொற்று காரணமாக அது போன்ற நிகழ்வுகள் பள்ளிவாசல்களில் நடைபெறக் கூடாது எனவும் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது.

எனவே, தமிழக அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளின்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிவாசல்களில் பக்ரீத் பண்டிகையை இஸ்லாமியர்கள் கொண்டாடினர்.

Top