logo
பெருந்துறை டிஎஸ்பி யிடம்  தோப்பு வெங்கடாசலம் மீது  பெருந்துறை  அதிமுக  எம்எல்ஏ ஜெயக்குமார்  புகார்

பெருந்துறை டிஎஸ்பி யிடம் தோப்பு வெங்கடாசலம் மீது பெருந்துறை அதிமுக எம்எல்ஏ ஜெயக்குமார் புகார்

21/Jul/2021 06:17:13

ஈரோடு,  ஜூலை: பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயக்குமார்  தோப்பு வெங்கடாசலம் மீது பெருந்துறை டிஎஸ்பி அலுவலகத்தில் அதிமுக நிர்வாகிகளுடன் சென்று புகார் மனு அளித்தார்.

அந்த மனு விவரம்: கடந்த ஜூலை 11-ஆம் தேதி திமுக வில் இணைந்த பெருந்துறையை சார்ந்த முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்எல்ஏவுமான தோப்பு வெங்கடாசலம்  கடந்த 12-ஆம் தேதி  சென்னை அறிவாலயத்தில் திராவிட முன்னேற்றக்கழக தலைவர் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தன்னை திமுக உறுப்பினராக  முன்னிலைப் படுத்திக்கொண்டு  திமுகவில் இணைந்தார் எனவும் அவருடன் பெருந்துறை தொகுதியில் 852 அதிமுகவினர் இணைந்தனர் என காலை நாளிதழில் ஒன்றில் விளம்பரம் வெளியாகி இருந்தது.

ஆனால், உண்மை என்னவென்றால் குறிப்பிட்ட சில உள்ளாட்சி பிரதிநிதிகள் மட்டுமே தோப்பு வெங்கடாச்சலத்துடன் பயணித்து திமுகவில் இணைந்துள்ளனர். திமுக வில் இணைந்து விட்டதாக கூறி காலை நாளிதழில் வெளியான 852 பேர் கொண்ட அதிமுகவினர் பட்டியலைப் பார்த்தபோது பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு டெபாசிட்டை இழந்த தோப்பு வெங்கடாச்சலம் தான் முறைகேடான பட்டியலை அளித்து திமுகவில் உறுப்பினாகி உள்ளது தெரிய வந்துள்ளது.

ஊத்துக்குளி மற்றும் சென்னிமலை ஒன்றியத்தில் உள்ள மூன்று ஒன்றிய குழு உறுப்பினர்களை திமுகவுக்கு சென்றதாக தவறான பட்டியல் கொடுத்துள்ளார். மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கிளைக் கழக செயலாளர்கள் வார்டு செயலாளர்கள் ஆகியோரின் அனுமதி இல்லாமலேயே அவர்களின் பெயரை திமுகவில் இணைந்ததாக தோப்பு வெங்கடாசலம் வெளியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல் தகவல் தொழில் நுட்ப அணி என சிலரை அதிமுகவிலிருந்து திமுகவுக்கு மாறியதாக நேற்றைய (19-07-21) காலை நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் அப்படிப்பட்ட ஒரு பிரிவு அதிகாரப்பூர்வமாக அதிமுகவில் இல்லை. திமுகவினரை ஏமாற்ற எத்தனை பொய்  மூட்டைகளை  வேண்டுமானாலும் திமுக உறுப்பினர் தோப்பு வெங்கடாச்சலம் அவிழ்த்து விடலாம். 

ஆனால் அதிமுக பெயரைச் சொல்லி தவறான தகவலை வெளியிட்டு வரும் நாளிதழ் மீதும், பொய்யான செய்திகளை பத்திரிகைகளுக்கு அளித்துவரும் திமுக உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம் மீதும் கழக ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின் படி மாவட்ட கழக செயலாளர் வழிகாட்டுதலோடு  சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. 

இந்நிலையில், அதிமுக கட்சியினரை திமுகவில் உறுப்பினர் ஆகுமாறு நேரில் சென்றும் தொலைபேசி மூலமாகவும் பலரை தோப்பு வெங்கடாசலம் மிரட்டுவதாக அதிமுகவை சார்ந்தவர்கள் தலைமைக்கு புகார் தெரிவித்து வருகின்றனர்.  

ஆளுங்கட்சியை எதிர்த்து அரசியல் செய்ய முடியாது என்னோடு திமுகவுக்கு வாருங்கள் இல்லையேல் உங்கள் மீது வழக்கு பாயும் எனவும் தேவைப்பட்டால் பணம் கொடுப்பதாகவும் கட்சியினரை விலை பேசி வருகிறார்.

திமுக உறுப்பினரான தோப்பு வெங்கடாசலம். மேற்கண்ட தரம் தாழ்ந்த செயல்களை அவர் நிறுத்தாவிட்டால் பெருந்துறை சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் அடுத்தகட்டமாக களத்தில் இறங்கி நடவடிக்கை மேற்க்கொள்ள நேரிடும். இதனால் ஏற்படும்  சட்டம்-ஒழுங்கு பிரச்சனைக்கு திமுக உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம் முழு பொறுப்பேற்க வேண்டும் எனவும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில், ஒன்றிய  செயலாளர்கள் பெருந்துறை விஜயன் (எ) ராமசாமி, ஊத்துக்குளி ரவிச்சந்திரன், பேரூர் செயலாளர்கள் பெருந்துறை கல்யாணசுந்தரம், காஞ்சிகோயில் சித்தப்பன், கருமாண்டி செல்லிபாளையம் பழனிச்சாமி, ஊத்துக்குளி சின்னசாமி, பெத்தாம்பாளையம் பெரியசாமி,

குன்னத்தூர்  அய்யாசாமி,  பள்ளபாளையம் கமலக்கண்ணன், நல்லாம்பட்டி துரைசாமி, யூனியன் சேர்மன் சாந்தி ஜெயராஜ், துணை சேர்மன் உமா மகேஸ்வரன், வேளாண்மை கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் ஜெகதீசன்,திங்களூர் கந்தசாமி,  சாமியப்பன், ஓ.ஆர்..பழனிச்சாமி, கே. கே. பழனிச்சாமி, குறிச்சி செந்தில் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Top