logo
 அரசின் கொரோனா கட்டுப்பாடுகளின் அளித்துள்ள தளர்வுகளை மக்கள் அலட்சியம் செய்யவேண்டாம்:  சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி

அரசின் கொரோனா கட்டுப்பாடுகளின் அளித்துள்ள தளர்வுகளை மக்கள் அலட்சியம் செய்யவேண்டாம்: சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி

19/Jul/2021 10:37:32

புதுக்கோட்டை, ஜூலை: அறந்தை பிரண்ட்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் ரூ.3 லட்சம் மதிப்பீல் வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் வழங்கும் நிகழ்ச்சியில்  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர்  எஸ்.ரகுபதி  பங்கேற்று மேலும் பேசியது:

தமிழகத்தில் கோவிட் தொற்றை கட்டுப்படுத்த  எடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாக கோவிட் பாதிப்பு பெருமளவில் குறைந்துள்ளது.  மேலும் புதுக்கோட்டை மாவட்டத்திலும்  கொரோனா தொற்று இரட்டை இலக்கத்தில்  குறைந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக அரசின் கோவிட் தடுப்பு பணிகளுக்கு பல்வேறு சமூக அமைப்புகளும் தேவையான ஒத்துழைப்பை வழங்கி வருகிறது. 

அறந்தை பிரண்ட்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு ரூ.3 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. அறந்தை பிரண்ட்ஸ் ரோட்டரி சங்கத்தினருக்கு  பாராட்டுகள்.

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு கோவிட் தடுப்பு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அரசின் கொரோனா கட்டுப்பாட்டில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளை அலட்சியம் செய்யாமல் முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கைகழுவுதல் போன்ற கோவிட் தடுப்பு வழிமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும்.

தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தப்படி பொதுமக்களுக்கு ரூ.4,000 கோவிட் நிவாரண தொகை மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கியது,  நகரப் பேருந்துகளில் மகளிர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என்ற  அறிவிப்பும்  பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. 

அனைத்து தரப்பு மக்களின் நலன் காக்கும் வகையில் தமிழகத்தில் பல்வேறு சிறப்பான திட்டங்களை  முதல்வர் செயல்படுத்தி  வருகிறார் என்றார் அமைச்சர் எஸ். ரகுபதி.

நிகழ்வில், முன்னாள் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம், ஒன்றியக்குழு துணைத்தலைவர் சீனியார், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சக்தி ராமசாமி, பெரிய கருப்பன், அறந்தை பிரண்ட்ஸ் ரோட்டரி சங்கம்பட்டயத்தலைவர் தங்கத்துரை, தலைவர் சேக் சுல்தான், செயலாளர் செந்தில்குமார், முன்னாள் மண்டல செயலாளர் கான்அப்துல் கபார் கான், பொருளாளர் ஆத்மா மதிவானன், உறுப்பினர்கள் செந்தில்வேலன், சிவசுப்பிரமணியன், செல்வம் மற்றும் டாக்டர் விஜய் ஆனந்த் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.  


Top