logo
ஈரோட்டில் 7 ஆயிரத்தை தாண்டியது  மொத்த பாதிப்பு... அறிகுறி இல்லாமல் வேகமாக பரவும் கொரோனா !

ஈரோட்டில் 7 ஆயிரத்தை தாண்டியது மொத்த பாதிப்பு... அறிகுறி இல்லாமல் வேகமாக பரவும் கொரோனா !

03/Oct/2020 04:51:06

ஈரோடு மாவட்டத்தில் தினமும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது அறிகுறியே இல்லாமல் கொரோனா வைரஸ்  வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக முதியவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் வீரியம் அதிகரித்து காணப்படுவதால் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது.

முகக்கவசம் சமூக இடைவெளியை  பொதுமக்கள் முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், மக்கள் அதை கடைப்பிடிப்பதாகத் தெரியவில்லை. பொது இடங்களில் கூட்டம் கூட்டமாக செல்வதை காணமுடிகிறது.

முகக்கவசத்தையும்  முறையாக அணிவதில்லை. தினமும் 100- க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், வெள்ளிக்கிழமை மட்டும் மாவட்டம் முழுவதும் புதிதாக 194 பேருக்கு  தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 7118 ஆக உயர்ந்தது. அதே  நேரம் நேற்று ஒரே நாளில் 143 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

இதனால் குணமடைந்தோர்  எண்ணிக்கை 5,863 ஆக உயர்ந்துள்ளது. இது சற்று ஆறுதல் அளிக்கும் விஷயமாக உள்ளது. 1,164 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 91 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.  தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்  பெரும்பாலும் அறிகுறி  இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று இரவு முதல் இன்று காலை வரை ஈரோடு மாநகராட்சி பகுதியில் மேலும் 27 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஈரோடு மாநகராட்சி மண்டபத்தில் உள்ள ஸ்கிரீனிங் மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு நோயின் தன்மைக்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. மேலும், மாவட்டம் முழுவதும் 559 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன. 


Top