logo
 ஈரோடு மாவட்டத்தில் அதிமுகவில் குறிப்பிட்ட சமூகத்திற்கே முக்கிய பதவிகள்...?  திமுக வில் தஞ்சமடையும் நிர்வாகிகள்..!

ஈரோடு மாவட்டத்தில் அதிமுகவில் குறிப்பிட்ட சமூகத்திற்கே முக்கிய பதவிகள்...? திமுக வில் தஞ்சமடையும் நிர்வாகிகள்..!

16/Jul/2021 05:53:15

By C. RAAJ, ERODE- ஈரோடு, ஜூலை: ஈரோடு மாவட்டத்தில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு அதிமுக வில் முக்கிய பதவிகள் வழங்கப்படுவதால் அந்தக் கட்சியை விட்டு  முக்கிய நிர்வாகிகள் திமுகவில் தஞ்சமடைவதாக  அதிமுக தொண்டர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் கொங்கு பகுதிகளான கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர்,சேலம் மாவட்டங்களில்  அதிமுகவின் செல்வாக்கு நடந்து முடிந்த சட்டமன்றத்தேர்தல் வரை  குறையவில்லை. அதற்கு அடித்தளமிட்டவர்  மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர். அதை தொடர்ந்து  தக்க வைத்தவர் அவருக்கு பின் முதல்வரான மறைந்த  ஜெயலலிதா. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், கொங்கு பகுதி  அதிமுக வுக்கு நன்றாகவே கை கொடுத்தது எனலாம். 

ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதிகள் அடங்கி உள்ளன. இதில், 100 சதவீத வெற்றி பெற முடியாமல் போனத்திற்கு,  கொங்கு வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு மற்றும் முக்கிய பதவிகளும் அவர்களிடமே உள்ளதால், மற்ற சமூகத்தினரின் வாக்குகள் சிதறிப் போனதால்  முழுமையான வெற்றிப் பெற முடியவில்லை.

அதிமுகவின் அனைத்து தரப்பினருக்கும்  வாய்ப்பு வழங்காமல் இருக்கு நிலை தொடர்வதால், முக்கிய நிர்வாகிகள் திமுகவில் தஞ்சமடையும் காட்சிகள் அரங்கேறிவருகிறது. இதைத்தடுக்க கட்சித்தலைமை கவனம் செலுத்த வேண்டுமென  கட்சி தொண்டர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

 சமீபத்தில் திமுகவில் சேர்ந்த சிந்து ரவிசந்திரனும் இதே குற்றச்சாட்டைகூறியிருந்தார். இது குறித்து அதிமுகவினர் கூறுகையில், கடந்த 2016 தேர்தலில், ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிபாளையம், பவானிசாகர் (தனி) ஆகிய 8 தொகுதிகளிலும் அதிமுகவே 100 சதவீதம் வெற்றி பெற்றது. 

2021 -இல் நடந்து முடிந்தசட்டமன்ற  தேர்தலில், ஈரோடு மேற்கு, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிபாளையம் ஆகிய 4 தொகுதிகளில், திமுகவும், அதிமுகவும் நேரடியாக மோதின. இதில், ஈரோடு மேற்கு, அந்தியூர் தொகுதிகளை திமுக.கைப்பற்றியது. மற்ற இரண்டு தொகுதிகளில் அதிமுக வும் வெற்றி பெற்றது. ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக கூட்டணியில் தமாகா சார்பில்  போட்டியிட்ட யுவராஜாவை, திமுக கூட்டணியில் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா  வென்றார்.

 ஈரோடு மாவட்டத்தில் 5 தொகுதிகளில் அதிமுக மற்றும் கூட்டணியினர் வெற்றிபெற்றிருந்தாலும் மற்ற மூன்று தொகுதிகளின்  தோல்விக்கு, அதிமுகவில் கட்சி பதவி முதல் வேட்பாளர் வரை  குறிப்பிட்ட(கொங்கு வேளாளர்) சமூகத்திற்கே வாய்ப்பு வழங்கப்படுவதும் மற்ற சமூகத்தினர் புறக்கணிப்படுவதும்  காரணமாகியுள்ளது என்கின்றனர் கட்சியின் நலம் விரும்பிகள்.  அதிமுகவில் மாநகர் மாவட்டம், புறநகர் மாவட்டம் என இரண்டு மாவட்டங்கள் உள்ளன. இதில், மாவட்ட செயலாளர், பகுதி செயலாளர் பதவிகளில் பெரும்பாலானோர்  ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள்தான் உள்ளனர்.

இதேபோல், கூட்டுறவு சங்கங்கள் உள்ளிட்ட முக்கிய பதவிகளும் அவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. ஆனால், திமுகவில், அது போன்ற  நிலைமை இல்லை. அதாவது, கட்சி பதவி முதல் வேட்பாளர் வரை அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.  சட்டமன்ற தேர்தலில் முதலியார், வன்னியர் சமூகத்தினருக்கும், சமீபத்தில் வன்னியர் சமூகத்தை சேர்ந்த குறிஞ்சி சிவகுமாருக்கு, அரசு கேபிள் டிவி  கழகத் தலைவர்  பொறுப்பும் திமுக தலைமையால் வழங்கப்பட்டுள்ளது.  சட்டமன்றத்தேர்தல் வேட்பாளர் தொடங்கி கட்சி மற்றும் அரசு பதவிகளுக்கு  அனைத்து தரப்பினருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன் காரணமாக அதிமுகவிலிருந்த பல்வேறு நிர்வாகிகள் திமுகவில் இணைந்து வருகின்றனர். 

ஈரோட்டை பொறுத்தவரையில் முதலியார்,வன்னியர், நாடார் போன்ற சமூகத்தினர் கணிசமான அளவில்  வசித்து வருகின்றனர். அதிமுகவில் இருக்கும் பிற  சமூகத்தினரையும் அரவணைத்து  கட்சி பொறுப்புகளில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கினால்  மட்டுமே  ஈரோடு மாவட்டத்தை அதிமுகவின் இரும்புக்கோட்டையாக  மீண்டும்  மாற்ற முடியும்  என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். தலைமை கவனத்தில் கொள்ளுமா?


Top