logo
புதுக்கோட்டையிலுள்ள தைலமரக்காடுகளை பசுமைக்குழு விரைவில் ஆய்வு செய்யவுள்ளது: அமைச்சர் மெய்யநாதன் தகவல்

புதுக்கோட்டையிலுள்ள தைலமரக்காடுகளை பசுமைக்குழு விரைவில் ஆய்வு செய்யவுள்ளது: அமைச்சர் மெய்யநாதன் தகவல்

12/Jul/2021 12:28:41


புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டை மாவட்டத்தில் 25 ஆயிரம் ஏக்கரில் உள்ள தைலமரங்கள், கருவேல மரங்களை  தமிழக முதல்வரால்  அமைக்கப்பட்ட பசுமைக் குழு முதன் முதலாக  ஆய்வு செய்ய வருகை தரவுள்ளது என்றார் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்.

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், திருக்கட்டளையில் பயனாளிகளுக்கு விலையில்லா சலவைப் பெட்டிகளை  அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.

பின்னர் அமைச்சர் பேசியதாவது.: ஏழை, எளிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை  அரசு செயல்படுத்தி வருகிறது. பொதுமக்களிடமிருந்து வரப்பெறும் விலையில்லா பட்டா வழங்குதல், வீடு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்ற முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.. 

கடந்த வாரம் இப்பகுதிக்கு வந்தபோது  இப்பகுதி மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களின் மீது உடனடி தீர்வு காண அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதனடிப்படையில் மனுக்களை பரிசீலித்து ஒருவார காலத்திற்குள் 11 பயனாளிகளுக்கு ரூ.54,000 மதிப்பில் விலையில்லா சலவைப் பெட்டிகள் தற்போது வழங்கப்படுகிறது. 

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு குடிநீர் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் 500 -க்கும் மேற்பட்ட இடங்களில் நீர்தேக்கத் தொட்டிகள் மற்றும் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பொதுமக்களுக்கு வீடுகள் தோறும் குடிநீர் வழங்கும் வகையில் குடிநீர் இணைப்புகள் அமைக்கவும், தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு முதலமைச்சர் சுற்றுச்சூழல் பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி வருகிறார். தமிழத்தில் பசுமைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.  இக்குழு முதன்முதலாக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு விரைவில் வருகைதர உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 25,000 ஏக்கர் பரப்பளவில் தைல மரங்களும், சீமைகருவேல மரங்களும் உள்ளது.  பசுமைக் குழு இதனை ஆய்வு செய்து, இம்மரங்களை அகற்றி பிற மரங்களை நட்டு, அடர்வனம் நிறைந்த பகுதியாக மாற்றி மழைப் பொழிவை அதிகரிக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்  அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன்.

 இதில், மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தமிழ்செல்வன், திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, ஒன்றியக்குழு உறுப்பினர் கண்ணன், ஊராட்சிமன்றத் தலைவர் ஜெயபால் உள்ளிட்டோர்  பலர் கலந்து கொண்டனர்.


Top